1“ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி னெழுமையு மேமாப் புடைத்து.’’ |
என்றார் ஆகலின் அவ்வாறு பொறிவாயிலாக அவாவினைச் செலுத்தாமல் அடக்கி நிறுத்தல். பொறி ஐந்து ஆகலின் அவற்றின் வழியாகச் செல்லும் அவாவும் ஐந்து ஆயின. இனி நினைவு என்பது, 2“பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.’’ |
எனவும், 3“அற்றது பற்றெனி, லுற்றது வீடுயிர் செற்றது மன்னுறி, லற்றிறை பற்றே.’’ |
எனவும் கூறினார் ஆகலின், அவ்வண்ணம் பற்றற்றானை யாதானும் ஓர் உருவத்தாயினும் உருவம் அன்றியாயினும் உள்ளத்து இருத்தி, யாதானும் ஒரு மந்திரத்தாயினும் மந்திரமன்றியாயினும் கருதுதல். உருவத்தால் குறித்தல் சகுண தியானம். அருவத்தால் குறித்தல் நிர்க்குண தியானம். மந்திரம் கோடல் சகற்பம். மந்திரம் இன்மை அகற்பம். இனிச் சமாதி என்பது ‘பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் கண்டு, அப்பொருளொடு தான் பிறனாகாத் தன்மை எய்தல். அவற்றின் பரப்பு எல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும்; யோக நூல்களுள் காண்க. அவற்றை இனி ஒருவகையான் உவமத்தினும் காட்டப்படும். இனி மலை, அகத்துள்ள நீரைப் புறத்துக் காட்டாது மறைக்கும் நிலன் போலன்றிப் புறத்தும் காட்டலின் பொய் இன்று. அருவி எனும் கையால் பல்லுயிர் வாரி, வாரிதியில் சேர்த்தலின் கொலை உடைத்து. நிலன், பல்லுயிர் தாங்கலின் கொலை இன்று. உழவர் இட்ட வித்துள் சிலவற்றை முளைப்பித்து வெளிக்காட்ட லின்றி, அவர் அறியாமல் கொண்டு உண்ணலின் களவு உடைத்து.
1திருக்குறள் 126 2திருக்குறள் 350 3திருவாய்மொழி முதற்பத்து 2-ஆம் திருவாய்மொழி 5 வது பாசுரம். 4திருக்குறள் 358 |