பக்கம் எண் :

62பாயிர விருத்தி

கும்பித்து, கும்பித்த காற்றினை நடு நாடியாகிய சுழுனையில் செலுத்தி நிலைக்கச் செய்தல். என்னை?

1“இட்ட தவ்வீ டிளகா திரேசித்துப்
 புட்டி படத்தச நாடியும் பூரித்துக்
 கொட்டிய பிராண னபானனுங் கும்பித்து
 நட்ட மிருக்க நமனில்லை தானே.’’

எனவும்,

2“கூட மெடுத்துக் குடிபுக்க மங்கைய
 ரோடுவர் மீளுவர் பன்னிரண் டங்குல
 நீடுவ ரெண்விரற் கண்டிப்பர் நால்விரற்
 கூடிக் கொளிற்கோல வஞ்செழுத் தாமே.’’

எனவும்,

3“பன்னிரண் டானைக்குப் பகலிர வுள்ளது
 பன்னிரண் டானையைப் பாக னறிகிலன்
 பன்னிரண் டானையைப் பாக னறிந்தபின்
 பன்னிரண் டானைக்குப் பகலிர வில்லையே.’’

எனவும் திருமந்திரம் கூறிற்று ஆகலின். வளிநிலை வகை நான்கனுள் முன்னைய மூன்றும் பூரகத்தையும் ஈற்றுநிலை இரேசகத்தையும் முதல்தொழிலாக்கோடலின் இறுதியில் நிகழும் தொழிலானவை அப்பெயர் பெற்றன. இனி இதனில் பிறழக் கூறும் நூலும் உள. அது முனைவன் நூலுக்கு முரணாதலை உபதேசமுறையான் உணர்க.

இனி மலை, மழை நீரினைத் தன்னகத்து இழுத்து வாங்கிப் பின் அக்காலத்தின் மிக்க அளவு தன் வயின் தடுத்து நிறுத்தி, நிறுத்திய நீரினுள் பாதியைத் தான் உண்டு, பாதியை வெளியில் விடுத்தலின் இரேசகம் உடைத்து. இரேசகம் என்பது உள் காற்றை வெளியில் விடுத்தலும் பூரகம் என்பது வெளிக்காற்றை உள் இழுத்தலும் ஆதலானும் மலை உள் இழுத்து எஞ்சிய நீரினை இரேசித்தலின் பின்னும் பூரித்தல் கூடாமையானும் பூரகம் இன்று.


1திருமந்திரம் 574

2திருமந்திரம் 576

3திருமந்திரம் 577