பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்63

நிலம், அந்நீரினை இழுத்து முற்றும் தடாமல் வெளியில் விடுத்துப் பின்னரும் உள் இழுத்து உண்ணலின் பூரகம் உடைத்து. உள்ளிழுத்த நீர் மண்ணொடு கலந்து சுவறாது தடுத்தல் இன்மையின் கும்பகம் இன்று.

பூ, தும்பி வாய் வைத்தகாலை மேலும் கீழும் உள்ள இரதத்தைத் தேனாகக் காம்பில் பூரித்துப், பூரித்த காலத்தில் மிக்களவத் தேனைத் தும்பி உண்ணுமாறு இரேசித்து அத்தும்பி உண்ட தேனின் மிக்களவிற்றாய தேனைத் தன்னகத்துக் கும்பித்தலின் கும்பகம் உடைத்து. கும்பித்த தேன் காற்றானும் ஞாயிற்றானும் சுவறலின் நடுநாடியின் அசையாது நிறுத்தலாகியநிலை இன்று.

துலாக்கோல், தான் தூக்கிய பொருள் மிகின் இரேசித்துக் குறைத்துக் குறையில் பூரித்து நிறைத்து, பின் நிறைந்த பொருளை நிறைகாட்டும் கருவியாகிய நடுவுநிலையுடைய நாவில் கூட்டி அசையவிடாது நிற்கச்செய்தல் உடைத்து.

அக்குடம், சிறாரிடத்து ஏற்ற கழலை அவர் இரந்தவழி ஒருங்கே வெளியில் விடுத்தலின் ஒருபாதி உண்டு மற்றைப்பாதி கழித்தலாய இரேசகம் இன்று. கழல் பெய்யப்பெய்ய உள்வாங்கலின் பூரகம் உடைத்து.

அப்பனை, தான் ஏற்றுக் கழித்த மழைநீரினை நிலம்போல மீண்டும் இழுத்தல் இன்மையின் பூரகம் இன்று. தன் ஓலையான் அம்மழைநீரைத் தடுத்துச் சிறிதுபோழ்து தாங்கலின் கும்பகம் உடைத்து.

அத்தெங்கு, கூம்பி மேல் நோக்கிச் செல்லலின் அதன் ஓலை மழைநீரினைத் தாங்காமையால் கும்பகம் இன்று. தன் இரதத்தை முடம்பட்டமையால் பாளையின் வழித்தாக மது எனக் காலாது நடுவே அசைவின்றி வைத்தலின் நிலை உடைத்து.

அப்பருத்தி, அகத்துள்ள பஞ்சினை விடாமையானும் புறத்துள்ள நீரினை உள்ளிழுத்தல் செய்யாமையானும் அசைதலானும் யாதானும் ஒரு நிலையின்மையானும் இரேசித்துப் பூரித்து அசையாது நிறுத்தலாகிய நிலை இன்று.

இவ்வாற்றான் வளி நிலையும் இன்மையும் பெறப்பட்டன.