பக்கம் எண் :

66பாயிர விருத்தி

அப்பனை, தான் நிற்கும் நிலத்தின் அடிப்பரப்பிற்கு நான்கு விரலின் மிக்க ஆழத்தின்கீழ் வேருடைத்து ஆதலின் இரண்டாவது நிலை இன்று. உச்சிக்குக் கீழும் பராரைக்கு மேலுமாய நடு இடத்துப் பாளையின்கண் மது உய்த்தலின் மூன்றாவது நிலை உடைத்து.

அத்தெங்கு தனக்கு உள்ளமாகிய நடு இடத்துள் மது உய்த்தல் இன்மையின் மூன்றாவதுநிலை இன்று. பாளை ஈனுதற்கு வேண்டும் கரு வருதற்கு வழியாகிய வேர் என்னும் மூலத் துவாரத்தை முக்காரம் இட்டு அடைத்தலானும் கூம்பி மேல் நோக்கலானும் ஓலையால் மறைத்தல் இன்மையின் கண்விழித்தலானும் நான்காவது நிலை உடைத்து.

அப்பருத்தி மேலைத் துவாரமாகிய நுனியை நோக்காது மல்லாந்து கிடத்தலானும் மூலமாகிய காம்பில் துவாரமே இன்மையின் முக்காரமிடல் வேண்டாமையானும் உள் இருக்கும் பஞ்சு தோன்றாமல் தோலால் மறைத்தலின் கண்விழித்தல் இன்மையானும் நான்காவது நிலை இன்று.

இவ்வாற்றால் தொகைநிலையும் அவற்றது இன்மையும் பெறப்பட்டன.

இனி அவாவுவது மனமே ஆதலானும், அம்மனத்தைப் பொறி உணர்வு அறச்செய்து அடக்கல் அமரர்க்கும் அரிது ஆகாலானும் அவ்வாறு அடக்கினும் அறிவது அறியாமையான் அசேதனம் எனப்படும் ஆதலானும், அறிவது அறிந்து பிறிது ஒன்றனை அவாவாமல் மனத்தினை அடக்கி ஒருவழி நிறுத்தலே நிறை எனப்படும். என்னை?

1“அஞ்சு மடக்கடக் கென்ப ரறிவிலா
  ரஞ்சு மடக்கு மமரரு மங்கிலை
  யஞ்சு மடக்கி லசேதன மாமென்றிட்
  டஞ்சு மடக்கா வறிவறிந் தேனே.’’

எனவும்,

2“அஞ்சுள சிங்க மடவியில் வாழ்வன
  வஞ்சும்போய் மேய்ந்துதம் மஞ்சக மேபுகு

1திருமந்திரம் 2099

2திருமந்திரம் 2026