நாவடக்கமும் வாயடக்கமும் உடைத்து. நீரின்றிப் பயிர் வாடுங்காலை வாய்க்கால் வழி ஓடிவரும் நீரோசை கேட்டுத் தன்முகத்துள்ள மடைக் கண்ணைத் திறத்தலானும் நீர்முற்றப் பாய்ந்தபின் அக்கண்ணை மூடலானும் கண் அடக்கம் இன்று. இனிப் பூ, தும்பியின் ஓசை கேட்டுத் தன்முகக் கண்ணைத் திறவாமையானும் அத்தும்பி அதன் காலால் தன் கண்ணைத் திறந்து தேன் உண்டு போயபின்னும் அக்கண்ணை மூடாமையானும் கண் அடக்கம் உடைத்து. தான் இடையறாது நறுமணம் விரும்பிக் கோடலானும் தும்பியின் குரல்கேட்டு முகம் மலர்தலும் மழையது வன்குரல்கேட்டு உதிர்தலும் உடைமையானும் மூக்கும் செவியும் அடக்கும் ஏனைய அடக்கம் இன்று. இனித் துலாக்கோல், நறுமணப் பொருளாயினும் அஃது இல்பொருளாயினும் தூக்கி நிறுத்தலானும் இன்குரல் கேட்பினும் வன்குரல் கேட்பினும் தான் நடுவுநிற்றலின் வழாமையானும் ஏனைய இரண்டு அடக்கமும் உடைத்து. இனியே அக்குடம், விளையாட்டு முற்றிய பின்னர்ச் சிறாரான் வைக்கோல்போர் முதலியவற்றுள் மறைத்துவைக்கப்படும் இயல்பிற்று ஆதலின் குளிர்க்கு அஞ்சிப் போர்த்துக் கிடைகோடல் காட்டலால் மெய் அடக்கம் இன்று. ஒலியாமையானும் யாது பெய்யினும் ஏற்கும் இயல்பிற்று ஆதலானும் நா அடக்கமும் வாய் அடக்கமும் உடைத்து. அப்பனை, ஒலித்தலானும் கள்ளினைப் பாளைவாயிலான் காலுதலானும் அவ்விரண்டு அடக்கமும் இன்று. நீர்ப் பாய்ச்சினைத் தான் வேண்டாமையின் வரம்பு மடைக்கண்ணும் தான் நின்ற இடத்து இன்மையின் கண் அடக்கம் உடைத்து. அத்தெங்கு, பிறதெங்கின் நடுநிற்பதல் ஏனைத் தெங்கினுக்காக நாற்பக்கத்தும் வரம்புகோலி நீர்ப் பாய்ச்சல் பொருட்டு மடைக்கண் வைத்தல் வழக்காதலின் நீர் வருகாலைக் கண்திறத்தலும் பாய்ந்த பின்னர்க் கண்மூடலும் உடைமையின் அவ்வடக்கம் இன்று. ஏனைய தெங்கினது பாளையின் நன்மணத்தினும் அப்பாளையின் ஊறும் கள்ளினது தீயமணத்தினும் தான் ஒப்பநிற்றலானும் காற்றொலிக்கும் மழை யொலிக்கும் ஒப்ப நிற்றலானும் மூக்கும் செவியும் அடக்கல் உடைத்து. |