இனித் துலாக்கோல், வண்ணான் ஒலிக்கும் சதுரப்பலகை போல்வதாகிய தூக்கின்மேல் தூங்கு கயிறாகிய கண்ணின்வழியாக மோழைபடாமல் கரைகட்டி, நிற்கும் பொருளை மேலாக அல்லது கீழாக வாங்காமல் கயிற்றின் இடையாகிய விண்ணாறுவாங்கி நிரப்புதலானும் நாவை ஏறிட்டுக் காட்டி அதன்வரையானே நிறைகாட்டி ஐயமாகிய அழுக்கினை நீக்கலானும் அத்தியானமும் சமாதியும் உடைத்தென்று அனுமிக்கப்படும். அப்பருத்தி, அத்தன்மை இன்மையின் அத்தியானமும் சமாதியும் இன்று. இவ்வாற்றான் யோகுபுரிவாருள் அவ் இருவகையாரது தன்மை உணரப்படும். இனி, 1“நீஇ ராட னிலக்கிடை கோட றோஒ லுடுத்த றொல்லெரி யோம்ப லூரடை யாமை யுறுசடை புனைதல் நாட்டி லுணவு கடவுட் பூசை யேற்ற தவத்தி னியல்பென மொழிப.’’ |
எனவும், 2“நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் சோர்சடை தாழச் சுடரோம்பி- யூரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி.’’ |
எனவும் கூறினார் ஆகலின், அவற்றை நாலிரு வழக்கின் தாபதப் பக்கமாம் என்பாரும் உளர். அது பொருந்தாது. என்னை? தாபதப்பக்கம் எட்டனுள் ஒன்றாகிய நியமத்தின்கண் நீராடல் முதலாய அவ் எண்வகைத் தவமும் அடங்கலாம் என்பது.
1தொல் பொருள் 166 வது பக்கம். 2தொல் பொருள் 166 வது பக்கம். |