பக்கம் எண் :

8பாயிர விருத்தி

தொடங்கியபின் இடையிடையே நண்ணிய பகையும், அவ்வக்காலை உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைக என்ற பெருநாவலரது உறுதிமொழி கடைப்பிடித்துப் பயன்தூக்காது உதவி செய்து நகைசெயற்பொருட்டன்றி நட்ட நயன்பெரிய புண்ணியசீலர் பண்ணியதையும், அவருள் பல்லோர் அளித்த பொருளின் தொகையும், சில்லோர் செய்த அருளின் மிகையும் என இவையே உரைக்கப் புக்கேன்.

ஆசிரியர் அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவருள்ளும் சிறந்தாரும், சமதக்கினி முனிவர்க்கு மகனாரும், திரணதூமாக்கினி என்னும் இயற்பெயருடையாரும், நோற்றலின் ஆற்றலால் கூற்றம் குதித்தலும் ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியினாற்றிய அறிவும் கைகூடிய அருந்தவக் கொள்கைப் பெருந்தகையாரும், உருத்திரன் அமிசத்தால் அவதரித்தாரும், ஐந்திரம் நிறைந்தாருமாகிய ஆசிரியர் தொல்காப்பியனார் பல்காப்பியப் பயனும் ஒருங்கே பெறுமாறு தொகுத்துக் கூறிய தொல்காப்பியத்தின் பெருமையும் சில் காப்பியமும் முற்றத்தேரா என் அறிவின் சிறுமையும் தம்முள் ஒப்பு நோக்கி உரைப்புழி, அண்டமும் அணுவுமாம். எனினும் சாலாமை கண்டேனாயினும் அவாவின் பெருக்கால் அந்நூலும் அதன் உரையும் பின்னூலும் ஆராய்வான் புக்குச் சிற்சிலிடத்து முன்னுரைகள் ஒன்றோடொன்று ஒவ்வாமையின் தொன்னூல் துணிபு இதுவோ அதுவோ எனவும் பிறிதொன்றோ எனவும் ஐயுற்றும் பன்னூறு முறைப்படப் பல்லாற்றான்நாடி என் அறிவிற்கு எட்டிய அளவின் அவற்றுள் சில துணிந்தும் இற்றைக்கு ஐந்து ஆண்டின் முன்னர்த் தொல்காப்பியத்துள் சிற்சில சூத்திரங்கட்கே உரை எழுதக் கருதி, நுண்பொருட்கோவை எனப் பெயரிய ஒரு நூல் எழுதினேன். பின்னர் ஆயுந்தொறும் முன்னூலாகிய தொல்காப்பியக் கருத்துடன் அந்நூலுரைகளும் நன்னூல் முதலாய பின்னூல்களும் பெரும்பான்மை முரணாயின எனத் தோன்றலின், முற்றும் எழுதத் துணிந்து சுபகிருது ஆண்டு பங்குனித் திங்கள் உத்தரத்தில் தொடங்கி எழுதி வருகின்றேன். இதுகாறும் எழுத்ததிகாரமேனும் முடிதல் வேண்டுமாயினும், இடையிடை உற்றுக் கிடைகொளச் செய்த பிணியினாலும் அணியணியாக வந்து தடைபலசெய்த மிடி எனும் படையினாலும்