இடையீடு நேர்ந்தமையின், இதுபொழுது முடிந்தன பாயிரமும் நூல்மரபும் மொழிமரபும் என மூன்றே பிறப்பியல் எழுதப்படுகின்றது. இங்ஙனம் எழுதிவருகின்றகாலை நண்பர் சிலர் என் மருங்குற்று முன்உரை இருப்பப் புதிதாகிய நின்உரை உலகம் கொள்ளாது ஆகலின் இம்முயற்சி கைவிடுக எனக் கூறினாரும் உளர். முன் உரையாகிய இளம்பூரணம் இருப்பப் பின்னரும் பலர் உரை செயற்குக் காரணம் என்னை எனவும், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு எனப் பொதுமறை கூறிற்று அன்றி, முன் உளதாயின் கொள்ளுக, பின் உளதாயின் தள்ளுக என்று கூறிற்றின்றே எனவும், அதனால் உலகம் முன்னெனப் பின்னென எண்ணாது முதனூல் கருத்தொடு முரணாகா வழிக் கொள்ளும், முரணாயவழித் தள்ளும் எனவும் அவர்க்கு இறுத்து அவர் உடன்பாடும் பெற்றேன். அவருள் இலக்கணம் என்று பெயரும் கேட்டறியாதார் சிலர் ‘எமக்குக்காட்டி நன்றென யாம் கொண்டபின்னரே எழுதல் வேண்டும்’ என யான் கண்ணீர்விட்டு அழுதல்செய்யுமாறு துன்புறுத்தினாரும் உளர். அந்தோ யான் அவர்கட்கு எவ்வாறு உணர்த்தல் கூடும்? உணர்ச்சிவாயில் உணர்வோர் வலித்தேயன்றோ! அம்மட்டோடு ஒழியாமல் அவர் பின்னும் செற்றம்கொண்டு நிந்தைபல கூறி, இன்னும் தீங்கிழைப்பான் எண்ணித் திரிகின்றனர். நன்றல்லது அன்றே மறப்பது நன்றாகலின், யான் அவர் பெயரை யாண்டும் உரையேன். அதுவும் ஒரு நன்மை என்று கண்டே அவரையும் உதவி செய்தாராகவே மனத்துள் கொண்டேன். இதனை நண்பர் பலர் அறிவர். இங்ஙனமாகச் சோபகிருது வருடத் தொடக்கத்து முன்னரேயுள்ள நோய் முற்றி வயிற்றினுள் நாபியின்கீழ்க் கழலை ஒப்பத் திரண்டு இருமலமும் வெளிப்படாவண்ணம் தடுத்து, ஆவி போக்க முயன்றது. அக்காலைப் பல சுதேச மருத்துவரிடத்தும் பல ஆங்கில மருத்துவரிடத்தும் சென்று, பிணிதீர்த்துக் காத்தல் வேண்டும் எனப் பெரிதும் வேண்டினேன். அவர் எல்லாரும் அந்நோய் கருவிகொண்டு சேதிக்கற் பாற்று என்றும் அதுவும் முற்றியபடியால் இனிச் செய்யின் உயிர்க்கேடு செய்யும் என்றும் சொல்லினர். பின்னர்ப் பிறநாடு சென்றாயினும் பிணிதீர்ப்பான் கருதி, யான் அக்காலைச் சேதுபதி |