நீதர வந்த நிறையழி துயரநின் ஆடுகொடி மருங்குனின் னருளி னல்லது பிறிதிற் தீரா தென்பது பின்னின் றறியக் கூறுக மெழுமோ நெஞ்சே நாடுவிளங் கொண்புகழ் நடுதல் வேண்டித்தன் னாடுமழைத் தடக்கை யறுத்துமுறை நிறுத்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் கொற்கையம் பெருந்துறை குனிதிரை தொகுத்த விளங்கு முத்துறைக்கும் வெண்பற் பன்மாண் சாயற் பரதவர் மகட்கே”, என்னுஞ் செய்யுள் இரவு வலியுற்றது.1 ஊரும் பெயரும் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும்-தோழியை இரந்து பின்னிற்றலை வலித்த தலைவன் தலைவியுந் தோழியும் ஒருங்கு தலைப் பெய்த செவ்வி பார்த்தாயினும் தோழி தனித்துழியாயினும். நும்பதியும் பெயரும் யாவையெனவும் ஈண்டு யான் கெடுத்தவை காட்டுமினெனவும், அனையன பிறவற்றையும் அகத்தெழுந்ததோர் இன்னீர்மை தோன்றும் இக்கூற்று வேறோர் கருத்து உடைத்தென அவள் கருது மாற்றானும் அமையச் சொல்லித் தோழியைத் தன் குறை யறிவிக்கும். வினாவுவான் ஏதிலர் போல ஊரினை முன்வினாய்ச் சிறிது உறவு தோன்றப் பெயரினைப் பின் வினாய் அவ்விரண்டினும் மாற்றம் பெறாதான் ஒன்று கெடுத்தானாகவும் அதனை அவர் கண்டார் போலவும் கூறினான். இவன் எண்ணியதோர் குறையுடையனென்று அவள் கருதக் கூறுமென்பார் ‘நிரம்ப’ என்றார். கெடுதியாவன:- யானை, புலி முதலியனவும் நெஞ்சும் உணர்வும் இழந்தேன், அவை கண்டீரோவெனவும் வினாவுவன பலவுமாம்.
1. கருத்து: நெஞ்சமே! பொற்கைப் பாண்டியனின் கொற்கைத் துறையில் உள்ள முத்துப் போலும் பல்லும் சாயலும் உடையவளிடம் சென்று, நின்னால் எமக்குண்டான நோய் மருந்தால் தீராது மணியாலும் தீராது தவஞ் செய்தாலும் தீராது. தேனால் வந்த நோய்க்குத் தேனே மருந்தாவது போல நின்னால் வந்த வருத்தம் நீ யருளின் அல்லாமல் பிறிதொன்றால் தீராது என்று அவள் பின்னே நின்று அறியுமாறு கூறுவோம், எழுவாயாக. |