சேயரி பரந்த மாயிதழ் மழைக்க ணுறாஅ நோக்க முற்றவென் பைத னெஞ்ச முய்யு மாறே” 1 (நற்றிணை-75) இஃது அன்புற்று நக்குழித் தலைவன் கூறியது. அவட் பெற்று மலியினும்-தோழி உடம்பாடு பெற்று மனம் மகிழினும், (உ-ம்) “எமக்குநயந் தருளினை யாயிற் பணைத்தோ ளொண்ணுத லரிவையொடு மென்மெல வியலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி யன்னநின் பண்புபல கொண்டே” 2 (ஐங்குறு-175) இஃது அவட் பெற்று மலிந்து தலைவன் கூறியது. இன்னும், ‘அவட் பெற்று மலியினும்’ என்றதற்கு ‘இரட்டுற மொழிதல்’ என்றதனாற் தலைவியைப் பகற் குறியினும் இரவுக் குறியினும் பெற்று மகிழினும் என்று பொருளுரைக்க. “நன்றே செய்தவுதவி நன்று தெரிந் தியாமென் செய்குவ நெஞ்சே காமர் மெல்லியற் கொடிச்சி காப்பப் பல்குர லேனற் பாத்தருங் கிளியே” 3 (ஐங்குறு-288) இது பகற் குறிக்கட் கிளி புனத்தின்கட் படிகின்றதென்று தலைவியைக் காக்க ஏவியதனை அறிந்த தலைவன் அவளைப் பெற்றேமென மகிழ்ந்து கூறியது.
1. கருத்து: பக்கம் 129-ல் காண்க. 2. கருத்து: பக்கம் 109-ல் காண்க. 3. கருத்து: தினைப் புனத்திற் பரவி வரும் கிளிகள் நமக்கு நல்லதே செய்தன. அவற்றுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யவல்லேம். கிளிகள் தினைக்கதிர் உண்ண வந்தமையால் தினைப்புனம் காக்கத் தாய் தலைவியை அனுப்பினாள். அதனால் அவளை நாம் அடைந்து மகிழ்ந்தோம். இந்த உதவிக்கு யாம் என் செய்வோம் என்பது கருத்து. |