அமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பின் வண்டிடைப் படாஅ முயக்கமுந் தண்டாக் காதலும் தலைநாள் போன்மே” 1 (அகம்-332) எனவும், “பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலரே நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலரே எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல் யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப வேங்கை கமழும்எம் சிறுகுடி யாங்கறிந் தனையோ நோகோ யானே” 2 (குறுந்-355) எனவும், “அம்ம வாழி தோழி நலமிக நல்ல வாயின அளியமென் தோள்கள் மல்லல் இருங்கழி மலரும் மெல்லம் புலம்பன் வந்த வாறே” 3 (ஐங்குறு-120) எனவும் வரும். வருந்தொழிற் கருமை வாயில் கூறியவழித் தலைவி கூறியதற்குச் செய்யுள்:
1. கருத்து: விரும்பியவர்க்கு அமுதம் இனிமை பயப்பது போன்ற அவரது மார்பத்தின் வண்டு இடைபோக முடியாதபடி முயக்கமும் குறையாத காதலும் முதல் நாள்போல அமைந்தன. 2. கருத்து: வெற்ப! மேகம் பரந்து மறைத்தலின் விசும்பு தெரியவில்லை. மழைநீர் பெருகி ஓடுதலின் நிலம் தெரியவில்லை. ஞாயிறு மறைதலின் இருள் மிகுந்தது. பலரும் தூங்கும் இந்த நள்ளிரவில் எப்படி வந்தாய்? எம் சிறுகுடியை எப்படி அறிந்தாய்? யான்மிக வருந்துவன். 3. கருத்து: தோழீ! கேட்பாயாக மெல்லம் புலம்பன் இன்று வந்தமையால் நலம் கெட்டிருந்த என் தோள்கள் நலம் பெற்று நல்லவாயின. |