பக்கம் எண் :

204தொல்காப்பியம்-உரைவளம்

புலவுங்கொல் தோழி புணர்வறிந் தன்னை
செலவுங் கடிந்தாள் புனத்து”1      (திணை மொழி-10)

எனவும்,

“பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுதுகண் பனிப்ப வீசும் அதன்றலைப்
புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி
அன்னாய் என்னும் அன்னையும் மன்னோ
என்மலைந் தனன்கொல் தானே தன்மலை
ஆரம் நாறு மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றோனே” 2      (குறுந்-161)

எனவும் வரும்.

இவையெல்லாம் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தபின் நிகழ்வன. உள்ளப் புணர்ச்சியான் உரிமை பூண்டிருந்தவரும் இவ்வாறு கூறப்பெறும் என்று கொள்க. ஆண்டு மனநிகழ்ச்சி ஒருப்பட்டு நிற்றலின்.

உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர்செல என்பது-இவ்வாறு கூறாக் காலத்து உயிர் செல்லுமாறு சொல்லுதலும் என்றவாறு.

ஈண்டு, உயிர்த்தல் என்பது சுவாதம் எனினும் அமையும், இந் நிகழ்ச்சியைத் தோழிக்கு நாணத்தால் உரையாளாயின் நோயட வருந்தும் என்றவாறு.


1. கருத்து: தோழீ! அன்னையானவள் நாம் காதலனைப் புணர்ந்ததை யறிந்துப் புனங்காக்கச் செல்லும் செலவை நீக்கினாள். அதனால் இனிப் பகற்குறி வாயாது. அதனால் பலாப்பழம் பெற்ற ஆண் குரங்கு எல என்று பெண் குரங்கை அழைக்கும்படியான மலை நாடன் புலந்து கொள்ளுமோ?

2. கருத்து: தோழீ! பொழுதும் இருண்டது. மழையும் விடாமல் பேயும் கண் சிம்புளிக்கப் பெய்யும். அவற்றுக்கு மேலும் நம் தாய் தன் புதல்வனைத் தழுவியபடி என்னை அன்னாய் என விளிக்கும். இந் நிலையில் தலைவன் மழையில் நனைந்த யானைபோல் வந்தனன். பின் அவன் என் செய்தானோ.