உதாரணம்:- “தழையணி அல்குல் தாங்கல் செல்லா நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக அம்மெல் லாகம் நிறைய வீங்கிய கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின யாங்கா குவள்கொல் பூங்குழை என்னும் அவல நெஞ்சமொ டுசாவாக் கவலை மாக்கட்டிப் பேதை யூரே” 1 (குறுந்-159) இது யாங்காகுவளென உயிர் செலவு குறித்து நின்றது. “இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழிநம் படப்பை நீர்வார் பைம்புதற் கலித்த மாரிப் பீரத் தலர்சில கொண்டே”2 (குறுந்-98) எனவரும். வேற்றுவரைவு .........தன் பிழைப்பாகத் தழீஇத்தேறலும் என்பது-வேற்று வரைவுவரின் அது மாற்றுதல் முதலாகத் தமர் தற்காத்த காரணப்பக்கம் ஈறாக நிகழும்வழித் தன்குறிதப்பித் தலைவன் எதிர்ப்படுதலில்லாக் காலத்து வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன்குறையாக வுடம்பட்டுத் தேறுதலும் என்றவாறு. ஆண்டுக் கலக்கமின்றித் தேறுமென்பது கூறினாராம். அவ்வழி. வேற்று வரைவுவரின் அது மாற்றுதற் கண்ணும் என்பது-பிறனொருவன் வரையவரின் அதனை மாற்றுதற்காகவும்தன் குறி தப்பும் என்றவாறு,
1. கருத்து: முலைகள் இவள் மார்பக முழுதும் பருத்துச் செப்புடன் ஒத்தன. அதனால் இவள் இனி எந்நிலையுடையள் ஆவளோ என ஆராயாநின்ற கவலையையுடைய மாக்களை உடையது இவ்வறிவற்ற வூர். 2. கருத்து: தோழீ! நம் மனைத் தோட்டத்துப் புதரில் தழைத்துப் படர்ந்த மாரிக் காலப் பீர்க்கம் பூக்களைப் பறித்துக் கொண்டு தலைவர் இருக்குமிடம் சென்று இம்மலரின் நிறம் போலாயினள் அவள் என்று சொல்லுவார் உளராயின் நன்று. |