பக்கம் எண் :

களவியல் சூ. 51 487

‘ஞாங்கர்க் கிளந்த மூன்று’ என்பன ‘ஓதல் பகையே தூது இவை பிரிவே (அகத்-27) என முன்னர்க் கூறப்பட்ட மூவகைப் பிரிவுகள். ஞாங்கர்-முன். பொருள்-காரணம். ஓதல் பகை தூது என்னும் இம்மூன்றும் காரணமாகத் தலைமகளை வரையாது பிரிதல் இல்லையெனவே, வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிதலும் வேந்தற்கு உறுதுணையாகப் பிரிதலும் நாடு காத்தற்குப் பிரிதலும் தலைமகனுக்கு உண்டு என்றவாறாம்.

களவு வெளிப்பட்டபின் வரையுங் காலத்து ‘இவற் குரியவள் இவள்’ என எல்லாராலும் முன்னமே அறியப் பெற்றமையால் அவ்விருவரும் வரைதற்கு முன்னரே கற்புக் கடம் பூண்டவரா யினமையின் அவர் தம் வாழ்க்கை கற்பியல் வாழ்க்கையொடு ஒத்ததாயிற்று என்பார், வெளிப்படைதானே கற்பினோடொப்பினும்’ என்றார் ஆசிரியர். இத்தொடரை

வெளிப்படை தானே கற்பினோ டொப்பினும் தந்தை தாமே தன்னைய ரென்றாங்கு அன்னவர் அறியப் பண்பாகுமே (26)

எனவரும் நூற்பாவில் இறையனார் களவியல் ஆசிரியர் இவ்வாறே எடுத்தாண்டுள்ளமை தொல்காப்பியத்திலுள்ள களவியலையும் கற்பியலையும் அடியொற்றியெழுந்தது இறையனார் களவியல் என்னும் உண்மையை நன்கு புலப்படுத்துவதாகும்.

களவியல் முற்றிற்று.