பக்கம் எண் :

 1

தொல்காப்பியம்

--------

பொருளதிகாரம்

பேராசிரியம்

--------

ஆறாவது: மெய்ப்பாட்டியல்

--------

[மெய்ப்பாடு இத்துணைய எனலும்
அவை இத்துணையவாய் அடங்குமெனலும்]

249.பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளுங்
கண்ணிய புறனே நானான் கென்ப.

என்பது சூத்திரம்.

இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், மெய்ப்பாட்டியலென்னும் பெயர்த்து. 1மெய்ப்பாடென்பன சில பொருள் உணர்த்தினமையின் அப்பெயர்த்தாயிற்று. இதனானே ஓத்து நுதலியதூஉம் மெய்ப்பாடு உணர்த்துதலென்பது பெற்றாம். 2மெய்ப்பாடென்பது பொருட்பாடு; அஃதாவது, உலகத்தார்3உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுதல். அதனது இலக்கணங்


1. மெய்ப்பாடென்பனவாகிய சிலபொருள் என்க.

2. மெய் - பொருள். பொருள் உள்ளதாகலின் அதனை மெய் என்றார்; ஆகுபெயரான்

3. உள்ளநிகழ்ச்சி என்றது உள்ளத்தின்கண் நிகழும் நகை முதலிய சுவைக் குறிப்புக்களை. அவையே ஈண்டுப் பொருள் (மெய்) எனப்பட்டன. குணமும் பொருள் எனப்படுதலின் நகை முதலியன பொருள் எனப்பட்டன. படுதல் -- வெளிப்படுதல். எனவே ஒருவன் உள்ளத்தே நிகழ்ந்த நகை முதலிய சுவைக்குறிப்பு புறத்தார்க்கு அவன் உடம்பு வேறுபாட்டால் வெளிப்படுதல்