பக்கம் எண் :

108தொல்காப்பியம்

ஏழாவது : உவமவியல்

[உவமையின் பொதுவிலக்கணமும்
அவற்றின் பெயராதியவும் உணர்த்தல்]

276.வினைபயன் மெய்யுரு வென்ற நான்கே
வகைபெற வந்த வுவமத் தோற்றம்.

இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், உவமவியல் என்னும் பெயர்த்து. உவமம் என்பது, ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல். இதனானே இவ்வோத்து நுதலியதூஉம் உவமப் பொருளே கூறுதலாயிற்று. மற்று அகம் புறம் என்பனவற்றுள் இஃது என்ன பொருளெனப்படுமோவெனின், 1அவ்விரண்டுமெனப்படும்; “மெய்ப்பாடுபோல” என்பது; என்னை?

“உவமப் பொருளி 2னுற்ற துணருந்
 தெளிமருங் குளவே திறத்திய லான.”

(295)

என மேல் வருகின்றதாகலின்.

மற்றிவ் விருதிணைப் பொருளும் உவமம்பற்றி வழக்கினுள் அறியப்படுதலானும், உவமம்பற்றியும் பொருள் கூறுகின்றானென்பது. மேல் அகத்திணையியலுள் (49) உவமத்தினை இரண்டாக்கி ஓதினான், உள்ளுறையுவமம் ஏனையுவமமென; அவ்விரண்டனையும் ஈண்டு விரித்துக் கூறுகின்றவாறு; அவற்றுள், ஈண்டு ஏனையுவமத்தினை முற் கூறினான்; அஃது அகத்திணைக்கே 3சிறந்ததன்றாயினும் 4யாப்புடைமை நோக்கி; உலக வழக்


1. அவ்விரண்டும் என்றது அகம்புறம் என்னும் இரண்டையும். மெய்ப்பாடும் இரண்டற்கும் வருமென்றபடி.

2. ‘உற்றதுணரும்’ என்றதனால் அகம்புறமாகிய உவமிக்கப்படும் பொருளெல்லாங் கொள்ளப்படும் என்பதற்காக இச்சூத்திரங் காட்டப்பட்டது.

3. சிறந்ததின்றாயினும் எனவும் பாடம். அது சிறப்பு.

4. யாப்புடைமை--இயைபுடைமை. பரப்புடைமை எனவும் பாடம். ஏனையுவமத்தினை முற் கூறற்குப் பரப்புடைமையே நோக்கமாதல் காண்க. சேனாவரையரும் சொல்லதிகாரத்து உரியியலில் ‘குறிப்பும் பண்பும் இசையும் என்பவற்றுள் குறிப்புப் பரப்புடைமை நோக்கி முற் கூறினார்’ என்று கூறுதல் காண்க. உள்ளுறையுவமம் செய்யுட்குமாத்திரம் வரும். ஏனையுவமம் வழக்குச் செய்யுள் இரண்டற்கும் வரும் என்றபடி.