பக்கம் எண் :

110உவமவியல்

கினுஞ் செய்யுள் வழக்கினும் வருமாகலானுமென்பது. அஃதேல் உள்ளுறையுவமஞ் செய்யுட்கே உரிமையின் அதனைச் செய்யுளியலுட் கூறுகவெனின், உவமப் பகுதியாத லொப்புமை நோக்கி ஓரினப் பொருளாக்கி ஈண்டுக் கூறினானாயினும், வருகின்ற செய்யுளியற்கும் இயையுமாற்றான் 1அதனை ஈற்றுக்கண் வைத்தான். அது செய்யுட்குரித்தென்னுங் கருத்தானென்பது. எனவே, எழுத்தினுஞ் சொல்லினும்போலச் செய்யுட்குரியன செய்யுட்கென்றே ஓதலும் 2ஒருவகையாற் பெற்றாம்.

மற்று, ‘பாடல் சான்ற புலனெறி வழக்கம்’ (53) 3அல்லாத வழக்கு, ஆராயப் பயந்ததென்னையெனின்,--அப்புலனெறி வழக்கிற்கு உறுப்பாகிய வழக்கினை ஆராய்தலும் அதற்கு உபகாரமுடைத்தாதலா லென்றவாறு. மற்றிது, மேல் எவ்வோத்தினோடு இயைபுடைத்தோவெனின், மேற் பொருள்புலப்பாடு கூறிய மெய்ப்பாட்டியலோடு இயைபுடைத்து; என்னை? 4உவமத்தானும் பொருள் புலப்பாடே கூறுகின்றானாகலின், எங்ஙனமோவெனின்,--‘ஆபோலும் ஆமா’ என்றக்கால் ஆமா கண்டறியாதான் காட்டுட் சென்றவழி அதனைக் கண்டால் ஆபோலும் என்னும் உவமையேபற்றி ஆமா இதுவென்று அறியுமாகலானென்பது.

இவ்வோத்தின் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், உவமத்திற்கெல்லாம் பொதுவிலக்கணங் கூறி, அவற்றது பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.


1. அதனை--உள்ளுறையுவமையை, ஈற்றுக்கண் வைத்தமையாலே அடுத்துவரும் செய்யுளியற்கு உரித்தென்பது பெறப்படும் என்றபடி.

2. ஒருவகையாற் பெற்றாம் என்றது சூத்திரத்தாற் கூறாது அதிகாரத்தாற்பெறவைத்தமையை. எழுத்ததிகாரத்தும் சொல்லதிகாரத்தும் சூத்திரங்களால் செய்யுட்குரியவற்றைச் செயயுட்குரியவென எடுத்தோதுவர்: எடுத்தோதாதவற்றை அதிகாரத்தாற் பெறவைப்பர். அவ்வாறே ஈண்டும் உள்ளுறையுவமையதிகாரத்தைச் சாரச் செய்யுளியலை வைத்தமையால் செய்யுளுக்கே உள்ளுறை உவமை உரித்தென்பது ஓதியதாயிற்று என்றபடி.

3. அல்லாத வழக்கு--உலகவழக்கு.

4. உவமை பொருள் புலப்பாடும் அலங்காரமும்பற்றி வருமென்பர் இளம்பூரணர். அவருரை நோக்குக.