இதன் பொருள்: தொழிலும், பயனும், வடிவும், வண்ணமும் என்னும் நான்கெனப்படுங் கூறுபட வரும் உவமத்தோற்றம் என்றவாறு. 1‘உவமம்’ என்பதனை வினைமுதலாகிய நான்கினொடுங் கூட்டி வினையுவமம் பயனுவமம் மெய்யுவமம் உருவுவமமெனப்பெயர் கூறப்படும். வினையாற் பயப்பது பயனாதலின் பயத்திற்குமுன் வினை கூறப்பட்டது; அதுபோலப் 2பிழம்பினால் தோன்றும் நிறத்தினை 3அதற்குப்பின் வைத்தான்; பயனும் பொருளாக நோக்கி மெய்யினையும் 4அதனுடன் வைத்தானென்பது. மற்று மெய்யெனப்படுவது பொருளாதலின் அதன் புடைபெயர்ச்சியாகிய வினை பிற்கூறுகவெனின்,--வினையுவமந் தன்னுருபு தொக்கு நில்லாது விரிந்தே நிற்றற் சிறப்புடையனவும் உளவாக நோக்கி அது முற்கூறினானென்பது. அது ‘புலிமறவன்’ எனத் தொகாது ‘புலியன்ன மறவன்’ என விரிந்தே நிற்றலும், ‘புலிப்பாய்த்துள்’ எனத் தொக்குவருதலும் உடைத்தென்பது. தொகை நான்கென எண்ணிக்கொடுத்தான். வரலாறு:-- ‘புலியன்ன மறவன்’ என்பது வினையுவமம்; அது பாயுமாறே பாய்வனென்னுந் தொழில்பற்றி ஒப்பித்தமையின்; அற்றன்றித் தோலும் வாலுங் காலும் முதலாகிய வடிவும் ஏனைவண்ணமும் பயனும் ஒவ்வாவென்பது; ஒழிந்தவற்றிற்கும் இஃதொக்கும். “மாரி யன்ன வண்கைத் தேர்வே ளாயைக் காணிய சென்மே” (புறம். 133) என்பது பயவுவமம்; என்னை? மாரியான் விளைக்கப்படும் பொருளும், வண்கையாற் பெறும் பொருளும் ஒக்குமென்றவாறு.
1. உவமம் என்பது என்றிருப்பது நலம். கூறப்படும் என்பது பயனிலையாதலின். கூட்டி--கூட்டப்பட்டு. கூறப்படும் என்பதைக் கூறுதல் செய்யப்படும் என விரித்து எழுவாயும் பயனிலையுமாக்குவாருமுளர். (பிரயோகவிவேகம்) 2. பிழம்பு--திரட்சி. என்றது ஈண்டு வடிவினை. 3. அதற்கு--வடிவிற்கு. 4. அதனுடன்--பயனுடன். |