கின்றாளென்றமையின் இது 1தன்கட்டோன்றிய இழவுபற்றிப் பிறந்த அவலச் சுவையாயிற்று. 2”ஐயோ வெனின்யான் புலியஞ் சுவலே” (புறம்-255) என்பதும் அது. “பின்னொடு முடித்த மண்ணா முச்சி” (அகம்-73) என்னும் பாட்டினுள், “அணங்குறு கற்பொடு மடங்கொளச் சாஅய் நின்னோய்த் தலையையு மல்லை தெறுவர வென்னா குவள்கொ லளிய டானென வென்னழி பிரங்கு நின்னொ டியானும்” என்றவழி, தலைமகன் பிரிவிற்குத் தோழி படர்கூர்ந்தாளெனச் சொல்லினமையின், அது பிறன்கட்டோன்றிய 3இழிவுபற்றி அவலம் பிறந்ததாம். “துளியிடை மின்னுப்போற் றோன்றி யொருத்தி யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென் 4னெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டுந் துஞ்சேன்.” (கலி-139) எனத் தன்கட்டோன்றிய அசைவுபற்றி அவலம் பிறந்தது. “இல்வழங்கு மடமயில் பிணிக்குஞ் சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே” (புறம்-252) என்பது, 5பிறன்கட்டோன்றிய அசைவுபற்றிய அவலம்; என்னை? அள்ளிலைத்தாளி கொய்யாநின்றான் இதுபொழுது என அவலித்துச் சொல்லினமையின்.
1. தன் என்றது கணவனை யிழந்தாளை. அவளுக்குக் கண் கலுழ்நீர் கணவனையிழந்தமைபற்றி வந்ததாகலின் இழவு பற்றிய அவலமென்றார். 2. ஐயோவெனின் -- ஐயோவென் றரற்றுவேனாயின். இது கணவனையிழந்தாள் கூற்றாதலின் தன்கட்டோன்றிய இழவுபற்றி வந்த அவலமாயிற்று. 3. இழவு ஈண்டுப் பிரிவு. தலைவன் பிரிவுபற்றி வந்த அவலமாகலின் பிறன்கட்டோன்றியதாயிற்று. 4. தன் நெஞ்சாறு கொண்டாள் என்றமையானே தான் முன்னிலைமை கெட்டனனென்றா னாகலின், தன்கட்டோன்றிய அசைவுபற்றி வந்த அவலமாயிற்று. 5. பிறன் என்றது ஈண்டுத் தாபதனாயினானை. முன் மட மயிலைப் பிணிக்கும் வேட்டுவனாயிருந்தவன் இப்பொழுது அந் நிலைவிட்டு அள்ளிலைத் தாளிகொய்தலின். இது பிறன்கட்டோன்றிய அசைவாயிற்று. |