இது மேலெல்லாம் ஏனையுவமங் கூறி உள்ளுறையுவமம் உணர்த்துதல் நுதலிற்று. 1மேல் இசைதிரிந் திசைக்குமெனப் பட்டவற்றின் பகுதியாயினும் இதனை ஆண்டுக் கூறாது ஈண்டுக் கூறினான் உள்ளுறை யுவமமாகலானும் இவ்வோத்து உவமவியலாகலானுமென்பது. இ--ள் : பிறிதொடு படாது--உவமையோடு உவமிக்கப்படும் பொருள் பிறிதொன்று தாராது, பிறப்பொடு நோக்கி--உவம நிலங்களுட் பிறந்த2பிறவிகளோடு 3சார்த்தி நோக்கி, முன்னை மரபிற் கூறுங்காலை--கருத்தினான் இதற்கு இஃது உவமையென்று சொன்ன மரபினாற் கூறுங்காலை, துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே--இன்ன பொருட்கு இஃது உவமமாயிற்றென்பது துணிந்து கொள்ளத் தோன்றும் அவ்வாறு துணிந்து கொள்ளும் உணர்வுடையோர் கொள்ளின் என்றவாறு. எனவே, அஃது எல்லார்க்கும் புலனன்று நல்லுணர்வுடையோர்க்கே புலனென்பதூஉம், அவர் 4கொள்ளச் செய்யவேண்டுமென்பதூஉங் கூறியவாறு. இதனானே செய்யுளுட் பயின்று வருமென்பது கூறினானாம். அவற்றிற்கு உதாரணம் மேற் காட்டுதும். மற்றிதனை உவமையென்றதென்னை? உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாக நிறீஇக் கூறானாயினெனின்? அங்ஙனம் கூறானாயினும் உவமம்போன்று பொருள் கொள்ளப்படுதலின் அதனை உவமையென்றான். 5அஃது ஒப்பினாகிய பெயரென்பது; என்னை? இவற்றை உவமப் போலியென்பது கூறுமாகலின். (23) [உள்ளுறை உவமையின் வகை] 299. | உவமப் போலி யைந்தென மொழிப. |
இது மேற்கூறிய உள்ளுறையுவமை ஐவகைப்படுமென்கின்றது.
1. மேல் என்றது பொருளியல் 1-ம் சூத்திரத்தை. 2. பிறவி--உள்ளுறைப் பொருள். 3. சார்த்தி--உவமையைச் சார்த்தி. 4. கொள்ள--உள்ளுறைப் பொருளைக் கொள்ளத்தக்கதாக. 5. ஒப்பினாகிய பெயர் என்றது--உவமம்போன்று பொருள் கொள்ளப்படுதலின் இதனையும் உவமையென்றார் என்றபடி. |