மிகையானே வீரமுதலாயினபற்றியும் இளிவரல் பிறக்கும் என்றவாறு. இவையும் முன்னையபோலத் தன்கட்டோன்றுவனவும் பிறன்கட்டோன்றுவனவும் பற்றி எட்டாதலுடைய வென்பது கொள்க. 1”தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற் 2றிருமிடை மிடைந்த சிலசொற் பெருமூ தாளரே மாகிய வெமக்கே.” (புற-243) என்பது, தன்கட்டோன்றிய மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தது. என்னை? இளமைக்காலத்துச் செய்தன செய்யமாட்டாது இளிவந்தனம் இக்காலத்து என்றமையின். “மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம் 3முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல.” (அகம்-6) என்பதும் அது, “மூத்துத்தலை யிறைஞ்சிய நின்னோ டியானே போர்த்தொழி றொடங்க நாணுவ லதனான்.” என்பது, பிறன்கட்டோன்றிய மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தது. “இமயமுந் துளக்கும் பண்பினை 4துணையில ரளியர் பெண்டிரிஃ தெவனோ.” (குறு-158) என்பது, தன்கட்டோன்றிய பிணிபற்றி இளிவரவு பிறந்தது; என்னை? மலையைத் துளக்கும் ஆற்றலையுடையாய் காமப்பிணி கூர்ந்தோரை அலைப்பது நினக்குத் தகுவது அன்றென இளி வந்து வாடைக்குக் கூறினமையின். “குணகடற் றிரையது பறைதபு நாரை திண்டேர்ப் பொறையன் றொண்டி முன்றுறை யயிரை யாரிரைக் கணவந் தாஅங்குச் சேய ளரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே.” (குறு-128)
1. தொடி -- பூண். 2. இரும் -- இருமல். 3. முதுமையெள்ளல் என்றது தன்கட்டோன்றிய மூப்புக் காரணமாகப் பிறந்த இளிவரல். 4. துணையிலர் பெண்டிர் என்றது தலைவரைப் பிரிந்து காம நோயுழக்கும் பெண்டிர் என்றபடி. அதனால் பிணிபற்றிவந்த இளிவரல் என்றார். |