இதற்குரிய பாடம் இப்போது டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதிப்பில் வேறுவிதமாக உள்ளது. அப்பாடம் இங்கே கொள்ளலாகாது. கொள்ளிற் பேராசிரியர் இங்கே கூறிய உரையோடு மாறுபடும். 2. கரிய காலையுடைய வேங்கையின் பூக்கள் சொரிந்த பாறைக்கல் கரிய புலிக்குட்டிபோலத் தோன்றும் காட்டின்கண். (குறுந். 47) 300-ம் சூத்திரம் 1. கரும்பு நட்ட பாத்தியில் தானே முளைத்த தாமரைப் பூ வண்டின் பசியை நீக்கும் பெரிய நீரையுடைய ஊரனே! புதல்வனையீன்ற என்னை முயங்காதே கொள். அம்முயங்கல் உன் மார்பினழகைச் சிதைப்பதாகும். (ஐங்குறு. 65) 2. கரையில் நின்ற வேழம் கரும்பைப்போலப் பூக்கும் நீர்த்துறை பொருந்திய ஊரன் கொடுமையை நாணி நாம் நல்லன் என்பேம். நல்லன் அல்லன் என்னும் எனது பெரிய மெல்லிய தோள்கள். இதன் பின்னடி வேறு விதமாக ஐங்குறுநூற்றுப் புத்தகப் பிரதியில் காணப்படுகின்றது. (ஐங்குறு. 12) 3. நீரினுறைகின்ற கோழியின் நீலநிறம் பொருந்திய சேவலைக், கூரிய உகிரையுடைய பேடை நினைந்து தன் வேட்கை தீருமூரனே! இவள் வேட்கை நோய்க்கு நின் பரந்த மார்பு புளிங்காய் வேட்கைபோன்ற தன்மைத்து. (ஐங்குறு. 51) 4. தோழீ! யான் தலைவனோடு பொருந்தாத இயல்பினையுடையனல்லேன் பொருந்துமியல்பினேன். ஆயினும் நொது மலர் வரைவொடு புகுமொரு காரணத்தினால் மலையினிடத்து ஒன்றோடொன்று பொருத களிறுகளால் மிதிக்கப்பட்ட நெரிந்த அடியையுடைய வேங்கைமரம் குறமகளிர் தங்கூந்தலின்கண் அணிந்துகொள்ளும்பொருட்டு ஏறவேண்டாமல் நின்றபடியே கொய்யும்படி தாழ்ந்து மலர்தற்கிடமாகிய நாட்டையுடைய தலைவனொடு பொருந்தேன். (குறுந். 208) 5. அழகிய ஒள்ளிய தழையசையத் தூய அணியையணிந்த ஒள்ளிய நெற்றியையுடைய பரத்தை விளையாட்டாகப் பாய்ந்தாளாகத் தேனைப் பொருந்திய நறிய குவளைமலர் படிந்து நாறலால் தண்ணென்றிருந்தது பெரிய துறைநீர். (ஐங்குறு. 73) 6. பொய்கையைத் தனக்குப் படுக்கையிடமாகக் கொண்ட புலான்மணங் கமழும் நீர்நாயானது வாளைமீனை நாட்காலத்தே இரையாகப் பெறுகின்ற ஊரனே! எனது அழகு கெடினும் பிற பெண்டிராகிய பரத்தையரைத் தோய்ந்த மார்பைப் பெரும! பொருந்தேன். (ஐங்குறு. 63) |