பக்கம் எண் :

204செய்யுளியல்

எழுத்தியல் வகையென்பது, 1மேற்கூறிய எழுத்துக்களை 2இயற்றிக்கொள்ளுங் கூறுபாடு.

அசைவகையென்பது, அசைக் கூறுபாடு; அவை: இயலசையும் உரியசையுமென இரண்டாம்.

யாத்த சீரென்பது, (360) பொருள்பெறத் தொடர்ந்து நிற்குஞ் சீரென்றவாறு; எனவே, அசைபல தொடர்ந்து சீராங்கால் அவ்வசையுந் தத்தம் 3வகையாற் பொருள்பெற்று நிற்றலும், அவ்வாறன்றிச் சீர்முழுதும் ஒரு சொல்லாங்கால் அவ்வசை பொருள்பெறாது நிற்றலும் அடங்கின. தேமா என்று அசை பொருள் வேறுபெற்றன; சாத்தன் எனப் பொருள் வேறுபெறாதுநின்ற அசையாற் சீர் யாத்து நின்றது. பொருள் பெறநின்ற எழுத்தும் அசையுஞ் சிறப்புடையவென்பாருமுளர். அற்றன்று, பொருள்பட நிற்பன எழுத்து யாண்டுமின்மை யானும், பொருள்பெறநின்ற அசையானாகிய தேமாவென்னுஞ் சீரும் அவ்வசைச் சிறப்பினாற் சிறப்புடைச் சீரெனப்படாமை யானும் சாத்தன் எனத் தன்பொருளோடு தான் 4துணிந்து நின்றவழி அதுவுஞ் சிறப்புடைச் சீரெனவும்படுமாதலானு மென்பது.

அடியென்பது, அச்சீர் இரண்டும் பலவுந் தொடர்ந்தாவதோர் உறுப்பு.

யாப்பென்பது, 5அவ்வடிதோறும் பொருள்பெறச் செய்வதோர் செய்கை.

மரபென்பது, காலமுமிடனும்பற்றி வழக்குத் திரிந்தக் காலுந் திரிந்தவற்றுக்கு ஏற்ப, வழுப்படாமைச் செய்வதோர்


1. மேற்கூறிய எழுத்து -- எழுத்ததிகாரத்துட் கூறிய எழுத்து.

2. இயற்றிக்கொள்ளுதல் என்றது, எழுத்தியலிற் கூறிய முப்பத்துமூன்று எழுத்துக்களையும் செய்யுட்கேற்பப் பதினைந்தாக இயற்றிக் கோடலை. அதனை ‘மாத்திரையளவு மெழுத்தியல் வகையும்’ என்னும் 2-ம் சூத்திரவுரையுட் காண்க.

3. வகை--அசையின் வகைகள்.

4. துணிந்து--துண்டுபட்டு=பிரிந்து.

5. அடிதோறும் என்று பாட்டிற்கியைய உரைகாரர் கூறினும், உரை முதலிய ஏனை அறுவகை நிலங்களிலும் இவ்வியாப்பு அமையும். என்னை? அவையும் யாப்பெனக் கூறப்படலின். 391-ம் சூத்திரம் நோக்குக.