பக்கம் எண் :

பொருளதிகாரம்203

இ--ள் : இக்கூறப்பட்ட முப்பத்துநான்கும் பேரிசைப்புலவர் செய்யப்படுஞ் செய்யுட்கு உறுப்பாமென அவ்வாறு செய்தல் வன்மையாற் கூறினார் புலவர் என்றவாறு.

அப்பெயர், பெயர்; அம்முறை, முறை; அத்தொகை, தொகை. தொகை ‘ஆறு தலையிட்ட வந்நா லைந்தும்’ எனவும், ‘எட்டு’ எனவும் இருவகையால் தோன்றக் கூறியது, ஏனைய போலாமல் எட்டுறுப்பும் ஒரோர் செய்யுட்கு 1ஒரோவொன்றேயும் வருமென்பதறிவித்தற்கும், 2அவைதாம் அச்செய்யுள் பல தொடர்ந்தவழியே பெரும்பான்மையும் உறுப்பாமென்பதறிவித்தற்கும் அவ்வாறு கூறினார் என்க. எனவே, ஒழிந்த உறுப்பு இருபத்தாறும் 3ஒன்றொன்றனை இன்றியமையாவென்பது பெற்றாம்.

இனி, மாத்திரையென்பது எழுத்திற்கோதிய மாத்திரைகளைச் 4செய்யுள் விராய்க்கிடக்கும் அளவையென்றவாறு. 5மாத்திரையது மாத்திரையினை ஈண்டு மாத்திரையென்றான். அது ‘மாத்திரையளவும்’ (314) என்பதனாற் பெற்றாம்.


1. ஒரோவொன்று--ஒவ்வொன்று. வனப்பெட்டனுள் ஒன்றே ஒரு செய்யுட்கு வருதலும் என்றபடி. வனப்புக் கூறுமிடத்து இளம்பூரணர் காட்டிய உதாரணங்களை நோக்கும் போது அவர்க்கு. பல தொடர்ந்தவற்றிலன்றித் தனிச் செய்யுளிடத்தேயே வனப்பு வருமென்பது கருத்துப்போலத் தோன்றுகின்றது. பல தொடர்ந்த தொடர்நிலைச் செய்யுளைப் பற்றித் தொல்காப்பியர் ஒன்றுங் கூறாமையின் பிற்காலத்துத் தொடர் நிலைச் செய்யுள்களை உதாரணங் காட்டல் பொருந்துமோ என்பது ஆராயத் தக்கது.

2. அவைதாம் என்றது அவ்வெட்டுந்தாம் என்றபடி.

3. ஒன்றொன்றனை இன்றியமையாமையாவது;--மாத்திரையை எழுத்தும் எழுத்தை அசையும் அசையைச் சீரும் என்று இங்ஙனம் ஒன்றையொன்று இன்றியமையாமை. எனவே வனப்பெட்டும் ஒன்றையொன்று இன்றியமையாதனவல்ல என்றபடி.

4. செய்யுள் விராய்க் கிடக்கும் அளவை என்றது--செய்யுள் முழுவதையும் படிக்குமிடத்து அதன்கண் விரவிக் கிடக்கும் ஓசையின் அளவு என்றபடி. நச்சினார்க்கினியர் மாத்திரை என்றது எழுத்துக்குரியதாக எழுத்ததிகாரத்தோதிய மாத்திரைகள் தத்தம் அளவின் இறந்து பாவின் ஓசை வேறுபாடுகளை உணர்த்தி விராய் நிற்கும் ஓசை என்பர்.

5. மாத்திரையினது மாத்திரை என்றது--மாத்திரையினளவு என்றபடி.