பக்கம் எண் :

34மெய்ப்பாட்டியல்

மனம் புழுங்குதல். ஐயமென்பது, ஒரு பொருண்மேல் இரு 1பொருட்டன்மை கருதிவரும் மனத் தடுமாற்றம். மிகையென்பது, கல்லாமையுஞ் செல்வமும் இளமையும் முதலாக வரும் உள்ள மிகுதி. நடுக்கமென்பது, அன்பும் அச்சமும் முதலாயின உடம்பிற் புலப்படுமாற்றான் உள்ளநடுங்குதல்; புதல்வர்க்குப் பிணி இல்வழியும் எவனாங்கொலென்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலாம். அச்ச மென்னுஞ் சுவை பிறந்ததன் பின்னர் அதன்வழித் தோன்றிய நடுக்கம் அச்சத்தாற்றோன்றிய நடுக்கமா மென்பது.

இவை முப்பத்திரண்டும் மேற்கூறிய முப்பத்திரண்டும் போல அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகி நிகழும் மெய்ப்பாடெனக் கொள்க. இவையெல்லாம் உலகவழக்காகலான் இவ் வழக்கேபற்றி நாடக வழக்குள்ளுங் கடியப்படா வென்றவாறு. மற்றிவற்றை எண்ணிய மாத்திரை யல்லது இலக்கணங் கூறுகின்றிலனாலெனின், 2சொல்லின் முடியும் இலக்கணத்தவாகலின் சொல்லானாயினா னென்பது. உதாரணம் அக்கூறியவாற்றான் வழக்குநோக்கியுஞ் செய்யுணோக்கியுங் கண்டுணரப்படும்.

(12)

[ஒரு தலைவனும் ஒரு தலைவியும் எதிர்ப்பட்டவழி அவ்வெதிர்ப்பாடு தொடங்கிப் புணர்ச்சியளவும் நிகழும் முப்பகுதி மெய்ப்பாடுகளுள் முதற்பகுதி இத்துணையது எனல்]

261. புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்த
னகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு
தகுமுறை நான்கே யொன்றென மொழிப.

இதன்மேலெல்லாம் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாகி வரும்  மெய்ப்பாடு கூறினான். இனி அகத்திணையுட் பெரும்பான்மையாகி வரும் மெய்ப்பாடு கூறுவான். தொடங்கி, அவற்றுள்ளுங் களவிற்குச் சிறந்துவரும் மெய்ப்பாடு கூறுவான், ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழி அவ்வெதிர்ப்பாடு தொடங்கிப் புணர்ச்சியளவும் மூன்று பகுதியவாம் மெய்ப்பாடெனவும், புணர்ச்சிப்பின்னர்க் களவு வெளிப்படுந் துணையும் மூன்று பகுதியவாம் அவையெனவும், அவையாறும் ஒரோ


1. பொருள் தன்மை எனப் பிரிக்க

2. சொல்லின் முடியு மிலக்கணமென்றது அவ்வச் சொல்லானே அவ்வவற்றி னிலக்கண முடிந்து கிடத்தலை.