நாணுதலென்பது, நாணுள்ளம் பிறர்க்கு வெளிப்பட நிகழும் நிகழ்ச்சி. துஞ்சலென்பது உறக்கம்; அது நடந்துவருகின்றான் கண்ணும் விளங்கத் தோன்றுதலின் அதுவும் மெய்ப்பாடெனப் பட்டது. அரற்றென்பது, அழுகையன்றிப் பலவுஞ் சொல்லித் தன் குறை கூறுதல்; அது, 1‘காடுகெழு செல்விக்குப் பேய் கூறும் அல்லல்போல’ வழக்கினுள்ளோர் கூறுவன. கனவென்பது, வாய் வெருவுதல்; அதனானும் அவனுள்ளத்து நிகழ்கின்ற தொன்று உண்டென்று அறியப்படும். முனிதலென்பது, வெறுத்தல்; அஃது அருளுஞ் சினமுமின்றி இடைநிகர்த்தாதல்; ‘வாழ்க்கை முனிந்தான்’ எனவும், 2”உறையுண் முனியுமவன் செல்லு மூரே.” (புறம்-96) எனவுஞ் சொல்லுபவாகலின். நினைதலென்பது, விருப்புற்று நினைத்தல்; ‘நின்னை மிகவும் நினைத்தேன்’ என்பது வழக்காதலின்; அந் நினைவுள்ளம் பிறர்க்குப் புலனாதலின் மெய்ப்பாடாயிற்று. வெரூஉதலென்பது, விலங்கும் புள்ளும்போல வெருவி நிகழும் உள்ள நிகழ்ச்சி; அஃது, அஞ்சவேண்டாதன கண்ட வழியும் கடிதிற் பிறந்து மாறுவதோர் வெறி. மடிமையென்பது, சோம்பு. கருதலென்பது, மறந்ததனை நினைத்தல். ஆராய்ச்சி யென்பது, ஒரு பொருளை நன்று தீதென்று ஆராய்தல். விரை வென்பது, இயற்கை வகையானன்றி ஒரு பொருட்கண் விரைவு தொழில்பட உள்ளநிகழுங் கருத்து. உயிர்ப்பென்பது, வேண்டிய பொருளைப் பெறாதவழிக் கையற வெய்திய கருத்து. அது நெட்டுயிர்ப்பிற்கு முதலாகலின் அதனையும் உயிர்ப்பென்றானென்பது. கையாறென்பது, அவ்வுயிர்ப்புமின்றி வினையொழிந்தயர்தல். இடுக்கணென்பது, மலர்ந்த நோக்கமின்றி 3மையனோக்கம்படவரும் இரக்கம். பொச்சாப்பென்பது, அற்றப்படுதல்; அஃதாவது, பாதுகாத்துச் செல்கின்ற பொருட்கண் யாதானும் ஓர் 4இகழ்ச்சியான் இடையறவுபடுதல். பொறாமையென்பது, அழுக்காறு; அஃதாவது, பிறர் செல்வங் கண்டவழி வேண்டா திருத்தல். வியர்த்தலென்பது, பொறாமை முதலாயினபற்றி
1. இதனைக் கலிங்கத்துப்பரணி நோக்கியறிக. 2. உறையுள் முனியும்--உறைதலை வெறுக்கும். உறைதல்--இருத்தல். 3. மையல்--மயக்கம். 4. இகழ்ச்சி--சோர்வு |