ராயிற் 1கோற்கையுங் 2கொடுமடியுடையும் விளித்த 3வீளையும் வெண்பல்லுமாகித் தோன்றலுமென் றின்னோரன்ன வழக்கு நோக்கிக் கொள்க. அடக்கமென்பது, உயர்ந்தோர்முன் அடங்கி யொழுகும் ஒழுக்கம்; அவை: பணிந்த மொழியுந் தணிந்த நடையுந் 4தானை மடக்கலும் வாய்புதைத்தலும் முதலாயின. வரைதலென்பது, காப்பன காத்துக் கடிவன கடிந் தொழுகும் ஒழுக்கம்; அவை: பார்ப்பாராயின் முத்தீ வேட்டலும் புலவுங்கள்ளும் முதலாயின கடிதலுமென் றின்னோரன்ன கொள்க. வரைதலென்பது தொழிலாதலான் இது தன்மையெனப்படாது. அன்பென்பது அருட்கு முதலாகி மனத்தில் நிகழு நேயம். அஃதுடையார்க்குப் பிறர்கட் டுன்பங் கண்டவழிக் கண்ணீர் விழுமாதலின் அவ்வருளானே அன்புடைமை விளங்குமென்பது. இவையெல்லாந் தத்த மனத்தி னிகழ்ச்சியை வெளிப்படுப்பன வாகலின் மெய்ப்பாடெனப்பட்டன. இனி வருகின்றனவற்றிற்கும் இஃதொக்கும். கைம்மிகலென்பது ஒழுக்கக்கேடு. அது சாதித் தருமத்தினை நீங்கினமை தன்னுள்ள நிகழ்ச்சியானே பிறர் அறியுமாற்றால் ஒழுகுதல். நலிதலென்பது, பிறர்க்கின்னா செய்து நெருங்குதல்; அது தீவினை மாக்கட்கண் நிகழும். அவரைக்கண்டு அச்சம் எழுந்ததாயின் அஃது அச்சத்தினுள் அடங்குமாகலின் அஃதன்று இஃதென்பது. 5சூழ்ச்சியென்பது, சுழற்சி; சூழ்வருவானைச் சுழல்வருமென்பவாகலின்; அது வெளிப்படுவதோர் குறிப்பின் அவன்கட் டோன்றலின் அதுவும் மெய்ப்பாடு; அஃதாவது மனத்தடுமாற்றம். 6வாழ்த்தலென்பது, பிறரால் வாழ்த்தப்படுதல்; இது பிறவினையன்றோவெனின், ஒருவனை நீடு வாழ்க என்று வாழ்த்தல் பிறவினையாயினும், அவன் வாழ்விக்கப்படுதலின் அவன் அவ்வாறுகூறல் அமையுமென்பது.
1. கோல்--மூங்கிற்றண்டு. 2. கொடு மடி--வளைந்த மடி. இக்காலத்து கொடுக்கு என்பர். இலை முதலிய இடற்கு விடும் வளைந்த மடி என்பர் அகநானூற் றுரைகாரர். 3. வீளை--சீழ்க்கை. 4. தானை மடக்கல்--உடையை ஒதுக்கல். 5. சூழ்ச்சி--எண்ணம் (சிந்தித்தல்) என்பர் இளம்பூரணர். 6. வாழ்த்தல்-.வாழ்த்தப்படுதல். வாழ்த்தல்--பிறரை வாழ்த்தல் என்றும், மனநிகழ்ச்சியாதலின் மெய்ப்பாடாயிற்று என்றும் இளம்பூரணர் கூறுவர். |