பக்கம் எண் :

பொருளதிகாரம்31

தன்னை நினைந்து இன்புறுதற்கு ஏதுவாகிய பற்றுள்ளம்; அஃதாவது, 1‘நிதிமேனின்ற மனம்’ போலச் செல்வமுடைமையான் வரும் மெய் வேறுபாடு. 2இன்புறலென்பது, அவ்வுடைமையை நினையுந்தோறும் 3இடையிட்டுப் பிறக்கும் மனமகிழ்ச்சி. நடுவு நிலையென்பது, ஒன்பது சுவையுள் ஒன்றென நாடக நிலையுள் வேண்டப்படுஞ் சமநிலை; அஃதாவது,

4”செஞ்சாந் தெறியினுஞ் செத்தினும் போழினு
 நெஞ்சோர்ந் தோடா நிலைமை.”

அது, காம வெகுளி மயக்க நீங்கினோர் கண்ணே நிகழ்வது; இது சிறுவரவிற்றாகலான் 5இவற்றொடு கூறினான். அருளலென்பது, மக்கண் முதலிய சுற்றத்தாரை அருளுதல்: அஃது,

“அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்.”

(கலி-11)

என்றாற்போல வருவது. ஆண்டைக் கருணையினை அழுகையென்றமையின் இஃது அதனோ டடங்காது. தன்மையென்பது சாதித்தன்மை; அவையாவன: பார்ப்பாராயிற் 6குந்தி மிதித்துக் குறுநடைகொண்டு வந்து தோன்றலும், அரசராயின் 7எடுத்த கழுத்தொடும் அடுத்த மார்பொடும் நடந்து சேறலும், இடைய


1. நிதிமேல் நின்ற மனம்--பொன்னின்மேல் நின்ற மனம். மனம்போல என்றமையான் மனம் வேறுபடுதல்போல என்பது கருத்தாம். ‘மரம்போல’ என்னும் பாடம் பொருத்தமாகக் காணப்படவில்லை. பொருந்துமேற் கொள்க.

2. இன்புறல்--நட்டாராகிப் பிரிந்து வந்தாரைக் கண்டுழி வருவதோர் மனமகிழ்ச்சி என்பர் இளம்பூரணர்.

3. நினையுந்தோறும் என்றமையின் நினைதலும் இடையிட்டு நினைதல் என்பது பெறப்படும்.

4. சிவந்த சாந்தை அப்பினும் தன்னுடம்பைத் துணிப்பினும் பிளப்பினும் அதன்கண் மனம் அறிந்து செல்லாத நிலை என்றது சமாதி நிலையை. ‘அப்பினும் துணிப்பினும்’ அறியா நிலை என்றதனால் விருப்பு வெறுப்பு அற்ற சமநிலை பெறப்படும். சமநிலை--ஒருமருங்கோடாத மன நிகழ்ச்சி என்பர் இளம்பூரணர். செத்தல்--செதுக்கலுமாம்.

5. இவற்றொடு -- இம் முப்பத்திரண்டோடு.

6. குந்தி மிதித்தல்--அழுந்த மிதியாது மெல்ல மிதித்தல். ‘குந்திய நடையினர்’ என்பர் கம்பரும்.

7. எடுத்த கழுத்து--நிமிர்த்திய கழுத்து.