[பொருள்வகை இதுவெனல்] 520. | இன்பமு மிடும்பையும் புணர்வும் பிரிவு மொழுக்கமு மென்றிவை யிழுக்குநெறி யின்றி யிதுவா கித்திணைக் குரிப்பொரு ளென்னாது பொதுவாய் நிற்றல் பொருள்வகை யென்ப. |
இது, பொருள்வகை கூறுகின்றது. இ--ள் : இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் ஒழுக்கமுமெனப்பட்ட இவை இழுக்காதவாற்றான் இத்திணைக்கு இது பொருளென்று ஆசிரியன் ஓதிய உரிப்பொருளன்றி அவற்றுக்கெல்லாம் பொதுவாகப் புலவனாற் செய்யப்படுவது பொருட் கூறெனப்படும் என்றவாறு. ‘வகை’ என்றதனாற் புலவன் றான் 1வகைந்ததே பொருளென்று கொள்க. அஃதன்றிச் செய்யுள் செய்தலாகாதென்பது இதன் கருத்து; அவை, “கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுத லந்தீங் கிளவிக் குறுமகண் மென்றோள் பெறனசைஇச் சென்றவென் னெஞ்சே.” (அகம் 9) என்றாற்போலச் செய்யுள் செய்தவன் 2தானே வகுப்பன வெல்லாங் கோடல்; இது பாலைப்பாட்டினுள் வந்ததாயினும் முல்லை முதலாயவற்றுக்கும் பொதுவாமென்பது. பொதுமை யென்பது எல்லா உரிப்பொருட்கும் ஏற்கப் பல்வேறு வகையாற் செய்தல். (208)
1. வகைதல்--வகுத்தல். 2. தானே வகுப்பதென்றது நெஞ்சிற்குத் தீண்டல், தைவரல், தோய்தல் முதலிய தொழிலைச் செய்தல் இல்லையாயினும் உள்ளதுபோல வகுத்துக் கூறுதல்போல்வன. இப்பொருள்போல்வன எல்லாத் திணைக்கும் பொதுவாதலின் ஏனைத் திணைகட்கும் இப்பொருள்போல்வன அமைத்துச் செய்யுள் செய்யலாம் என்றபடி. |