[துறை இதுவெனல்] 521. | அவ்வம் மக்களும் விலங்கு மன்றிப் பிறவவண் வரினுந் திறவதி னாடித் தத்த மியலின் மரபொடு முடியி னத்திறந் தானே துறையெனப் படுமே. |
இது, துறையென்னு முறுப்புணர்த்துகின்றது. இ--ள் : ஐவகை நிலத்திற்கும் உரியவெனப்படும் பல்வேறு வகைப்பட்ட மக்களும் மாவும் புள்ளும் ஓதி வந்தவாறன்றிப் படைத்துச் செயினும் அவ்வத் திணைக்கேற்ற இலக்கணமும் வரலாற்று முறைமையும் பிறழாமைச் செய்யின் அது மார்க்கமெனப்படும் என்றவாறு. மார்க்கமெனினும் துறையெனினும் ஒக்கும். “ஊர்க்கா னிவந்த பொதும்பரு ணீர்க்கால்.” (கலி. 56) என்னுங் கலியினுள், “கொழுநிழன் ஞாழன் முதிரிணர் கொண்டு கழும முடித்துக் கண்கூடு கூழை.” என நெய்தற்றலைமகள் போலக் கூறி, அவளை மருதநிலத்துக் கண்டான் போல “ஊர்க்கா னிவந்த பொதும்பருள்.” எனவும் சொல்லிப், பின் குறிஞ்சிப் பொருளாகிய புணர்தலுரிப்பொருளான் முடித்தான்; இவ்வாறு மயங்கச் செய்யினுங் குறிஞ்சித்துறைப் பாற்படச் செய்தமையின் அத்துறை யுறுப்பான் வந்ததென்பது. இதுவும் மேலைப்பொருள் வகைபோலப் புலவராற் செய்து கொள்ளப்படுவதாகலான் அதற்குப்பின் வைத்தானென்பது. மற்று “எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்.” (தொ. அகத். 19) என்பதனான், இது முடியாதோவெனின்,--அது கருப்பொருண் மயங்குதற்குக் கூறினான்; இது, மக்களே யன்றித் தலைவனுந் தலைவியும் மயங்குமாறும் நான்கு திணையும் ஒன்றொன்றனொடு மயங்குமாறுங் கூறி அது புலவராற் செய்துகொள்ளுவதோர் உறுப்பெனவும் ஓதிவந்த இலக்கணத்தன்றாயினும் அது பெறுமெனவுங் கூறினானென்பது. (209) |