[மாட்டாவது இதுவெனல்] 522. | அகன்றுபொருள் கிடப்பினு மணுகிய நிலையினு மியன்றுபொருண் முடியத் தந்தன ருணர்த்தன் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின். |
இது, 1மாட்டென்னும் உறுப்புணர்த்துகின்றது. இ--ள் : பொருள் கொள்ளுங்கால் அகன்று பொருள் கிடப்பச் செய்யினும் அணுகிக் கிடப்பச் செய்யினும் இருவகையானுஞ் சென்று பொருள் முடியுமாற்றாற் கொணர்ந்துரைப்பச் செய்தலை மாட்டென்னும் உறுப்பென்று சொல்லுவர் செய்யுள் வழக்கினுள் என்றவாறு. இதுவும் நால்வகைப் பொருள்கோளன்றிப் புலவரது வேறு செய்கை; அது, “முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே.” (பட்டின. 218--20) என நின்றது, பின்னர், “வேலினும் வெய்ய கானமவன் கோலினுந் தண்ணிய தடமென் றோளே.” (பட்டின. 300) எனச் 2சேய்த்தாகச் சென்று பொருள்கோடலின் அஃது அகன்று பொருள்கிடப்பினும் இயன்று பொருண்முடியத் தந்து உரைத்ததாம். 2“திறந்திடுமின் றீயவை பிற்காண்டு மாத ரிறந்துபடிற் பெரிதா மேதம்--உறந்தையர்கோன் தன்னார மார்பிற் றமிழர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு.” (முத்தொ. 42) என்பது, அணுகிய நிலையெனப்படும். பிறவுமன்ன; மாட்டுதலென்பது கொண்டுவந்து கொளுத்துதல். (210)
1. மாட்டுதல்--கொளுவுதல். என்றது சொற்களைக் கூட்டி முடிக்குமாறு பொருள் ஒன்றையொன்று அவாவிநிற்கச்செய்தலை. 2. வாரேன் என்றதற்கு, அவ்விரண்டடியானுங் கூறிய பொருள்கள் காரணமாதலின் சேய்த்தாக நின்ற அவ்விரண்டடியும் ஈண்டுக் கொண்டுவந்து மாட்டி ஏதுவாக்கிப் பொருள் கொள்ளப்படும் என்றபடி. 3. கதவு திறந்திடுமின் என அணுகிநின்ற எழுவாயைக் கொண்டுவந்து கூட்டி முடிக்கப்படலின் அணுகியமாட்டென்றார். |