[மாட்டும் எச்சமுமின்றியும் செய்யுள் செய்யப்படும் எனல்] 523. | மாட்டு மெச்சமு நாட்ட லின்றி 1யுடனிலை மொழியினுந் தொடர்நிலை பெறுமே. |
இது, மேற்கூறியவற்றுள் ஒருசாரனவற்றுக்குப் புறனடை. இ--ள் : மேற்கூறிய எச்சமும் மாட்டும் இன்றியும் அச்செய்யுளுட் கிடந்தவாறே அமையச்செய்யவும் பெறும் செய்யுள் என்றவாறு. எச்சமும் மாட்டுமாம் என்னாது, மாட்டு முற்கூறியதென்னையெனின்,--2எச்சம் முதலாகிய ஐந்து உறுப்பும் இவ்விதி பெறுமென்று கோடற்கு எதிர்சென்று தழீஇயினானென்பது. உதாரணம்: “வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழி நீர நீலப் பைம்போ துளரிப் புதல பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி நுண்மு ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென் றின்னா தெறிதரும் வாடையொ டென்னா யினள்கொ லென்னா தோரே.” (குறுந். 110) என்பது, எச்சமின்றி வந்தது. “தாமரை புரையுங் காமர் சேவடி.” (குறுந். கடவுள்) என்பது, முன்னமின்றி வந்தது. “மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே.” (குறு. 71) என்பது, பொருளின்றி வந்தது. “ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த.” (அகம். 8) என்பது, துறைவகையின்றி வந்தது. “யானே யீண்டை யேனே.” (குறுந். 54) என்பது, மாட்டின்றி வந்தது. இடைநின்ற மூன்றனை இலேசினாற் கொண்டு இரண்டினை எடுத்தோதினான் இவை இரண்டும் அவற்றது 3துணை இன்றியமையாச் சிறப்பினவல்லவென்றற்கென்பது. (211)
1. உடனிலை--உடனிற்றல். சொற் கிடந்தவாறே கிடப்பப் பொருள் பெறச்செய்தல். 2. எச்ச முதலிய ஐந்தாவன: எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு என்பன. 3. துணை--அளவு. இன்றியமையாச் சிறப்பினவல்ல எனப் பிரிக்க. |