[வண்ணம் இத்துணைத்து எனல்] 524. | வண்ணந் தாமே நாலைந் தென்ப. |
இது, முறையானே இறுதிநின்ற வண்ணம் இத்துணைப் பகுதித்தென்கின்றது. இ--ள் : வண்ணம் இருபது வகைப்படும் என்றவாறு. வண்ணமென்பது, சந்த வேறுபாடு. நூறும் பலவுமாகி வேறுபடினும் அவை ஈண்டடங்குமென்பதூஉம், அவ் வேறுபாடெல்லாஞ் சந்த வேற்றுமை செய்யாவென்பதூஉங் கூறியவாறு. அது நுண்ணுணர்வுடையார்க்குப் புலனாமென்பது. (212) [வண்ணங்களின் பெயர் இவை எனல்] 525. | அவைதாம் பாஅ வண்ணம் தாஅ வண்ணம் வல்லிசை வண்ண மெல்லிசை வண்ண மியைபு வண்ண மளபெடை வண்ண நெடுஞ்சீர் வண்ணங் குறுஞ்சீர் வண்ணஞ் சித்திர வண்ண நலிபு வண்ண மகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ண மொழுகு வண்ண மொரூஉ வண்ண மெண்ணு வண்ண மகைப்பு வண்ணந் தூங்கல் வண்ண மேந்தல் வண்ண முருட்டு வண்ண முடுகு வண்ணமென் றாங்கன மொழிப வறிந்திசி னோரே. |
இது, மேற்கூறப்பட்ட வண்ணங்களது பெயர் வேறுபாடு கூறுகின்றது. இ--ள் : மேற்சொல்லிய நாலைந்து வண்ணமும் இவ்விருபது பெயர் வேறுபாட்டினவென்று சொல்லுப அவற்றை உணர்ந்த ஆசிரியர் என்றவாறு. இது, முறையாயினவாறென்னையெனின்,--இது வரலாற்று முறைமை யென்றற்கு ‘ஆங்கன மொழிப வறிந்திசினோர்’ என்றானென்பது. அவையாமாறு சொல்லுகின்றான். (213) |