பக்கம் எண் :

பொருளதிகாரம்637

“புலிப்போத் தன்ன புல்லணற் காளை.”

(பெரும்பாண். 138)

எனவும் இவையும் இளமைக் குறிப்பினவாகலிற் காட்டப்பட்டன.

மற்று, ஓரறிவுயிர் ஈண்டுக் கூறியதென்னையெனின்,--குழவிப்பெயர் அதிகாரப்பட்டமையானென்பது. மற்றுப் புல்லும் மரனும் 1உயிரெனப்படுமோ வெனின்,--அவற்றை யுயிரென்றன் மரபுபட்ட வழக்காகலின் அம்மரபுங் கோடற்குக் கூறினான், ‘மரம் 2உய்ந்தது’ என்பவாகலின்.

(24)

[மேற் சூத்திரத்துட் கூறிய பெயர்களை
நெல்லும் புல்லும் பெறா எனல்]

580.நெல்லும் புல்லு நேரா ராண்டே.

இது, எய்தியது விலக்குகின்றது.

இ--ள் : அந்நான்கு பெயரானும் நெல்லும் புல்லுஞ் சொல்லப்படா என்றவாறு.

மற்று,

“புறக்கா ழனவே புல்லென மொழிப”

என்னுமாகலான் மேற்காட்டிய கமுகு முதலாகிய புல்லும் விலக்குண்ணும் பிறவெனின்,--அற்றன்று; புல்லென்பது பலபெயரொருசொல்லாகலான் நெல்லென்னும் இனத்தானே வேறுபடுத்துப் 3புல்லென்பது(புறம். 248)உணவின்மேற் கொள்க.

(25)

[இளமைப்பெயர் அவைஅன்றி இல எனல்]

581. சொல்லிய மரபி னிளமை தானே
சொல்லுங் காலை யவையல விலவே.

இது, புறனடைச் சூத்திரம்.


1. உயிரெனப்படுமோவெனின் என வினாவினமையால் உயிரன்று எனக் கூறுவாருமுளர் என்பது பெறுதும்.

2. உய்தல்--பிழைத்தல். (உயிர் நிலைத்தல்.)

3. புல்--இது நெற்போன்றதொரு சாதிப் பெயர். அதன் தானியத்தைப் புற்றானியமென்றும் அரிசியைப் புல்லரிசியென்றும் வழங்குதலாலறிக. வேறுபடுத்தென்றது புல்லென்னும் பொதுப்பெயரின் வேறுபடுத்துச் சிறப்புப்பெயராகக் கொள்க; அது நெல்லோடு இனம் சேர்த்தி எண்ணினமையாற் பெறப்படுமென்றபடி. உணவு--உணவுக்குரியது.