[மேற்கூறிய இளமைப் பெயர்களுள் ஓரறிவுயிர்க்குரியன இவை எனல்] | 579. | பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவு மமையு மோரறி வுயிர்க்கே. |
இ--ள் : பிள்ளை குழவி கன்று போத்தென்னும் நான்கும் ஓரறிவுயிரின் இளமைப்பெயர் என்றவாறு. ஓரறிவுயிரென்பன, முன்னர்ச்(582)சொல்லப்படும். ஓரறிவுயிரென்பது, 1பண்புத்தொகை. ‘கமுகம்பிள்ளை’, ‘தெங்கம்பிள்ளை’ எனவும், “வீழி றாழைக் குழவித் தீநீர்.” (பெரும்பாண். 357) எனவும், ‘பூங்கன்று’ எனவும், ‘போத்துக்கால்’ எனவும் வரும். வீழிறாழையெனப்பட்டது, தெங்கு; போத்துக்காலென்பது கரும்பு. ஓரறிவுயிர்க்குக் கொள்ளவும் அமையும் என்னும் உம்மையை எச்சப்படுத்துப் பிறவழியுங் கொள்ளப்படும்; அவை, “குழவிவேனில்” (கலி. 36) எனவும், “குழவித்திங்கள்.” (கலி. 103; சிலப். 2: 38) எனவும், “குழவிஞாயிறு.” (பெருங். 1-33: 29) எனவும், “பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்து.” (அகம். 36) எனவும்,
1. ஓரறிவுயிர்--ஓரறிவாகிய உயிர் என விரிதலின் பண்புத்தொகையென்றார். அவை மரம் முதலிய பரிச உணர்ச்சி மாத்திரம் உடையன. |