இ--ள் : இம்மூன்றுங் குழவியென்னும் பெயர்க்கு உரிய என்றவாறு. ‘நிரம்ப நாடின்’ என்பது, மூன்று பெயரும் ஒருபிறப்பின் பகுதியாகலின் அம்மூன்றற்கும் ஒப்ப வருமென்றவாறு. இக்கருத்தானே, “கோடுவாழ் குரங்கு.” (568) என்றவழி, இம்மூன்றுங் கொண்டாமென்பது. இவற்றுக்கு உதாரணங் காணாமையிற் காட்டாமாயினாம். இலக்கணம் உண்மையின் அமையுமென்பது. (22) [மேற்கூறிய இளமைப் பெயர்களுள் மக்கட்குரியன இவை எனல்] | 578. | குழவியு மகவு மாயிரண் 1டல்லவை கிழவ வல்ல மக்கட் கண்ணே. |
இ--ள் : குழவியும் மகவுமென்னும் இரண்டு2மல்லது மக்கட்கணின்ற இளமை தமக்கு வேறு பெயருடையவல்ல என்றவாறு. ஆணிளமையும் பெண்ணிளமையுமென் இரண்டாகலின் 3‘அல்லவை’ எனப் பன்மை கூறினான். “காவல், குழவிகொள் பவரி னோம்புமதி.” (புறம். 5) எனவும், “மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி.” (பெரும்பாண். 89) எனவும் வரும். “கிழவவல்ல” என்ற மிகையானே, ஆண்பிள்ளை பெண்பிள்ளையெனப் பிள்ளைப்பெயரும் மக்கட்பாற்படுவன கொள்க. (23)
1. உரையின் படி, அல்லவை அல்லது என்றிருத்தல் வேண்டும். 2. அல்லது, உடையவல்லவென இயைக்க. 3. அல்லவை என்பது இவர் கருத்தின்படி அல்ல என்று இருத்தல் வேண்டும். |