பக்கம் எண் :

634மரபியல்

அது,

“ஒய்யென வெழுந்த செவ்வாய்க் குழவி.”

(அகம். 165)

என வரும். நிகரவற்றுள்ளென 1மேற் குஞ்சரத்தோடொக்குமெனப்பட்ட கராத்தின் குழவியுங் கவரிக்குழவியும் வந்தவழிக் கண்டுகொள்க.

(19)

[குழவி என்னும் பெயரை இவையும் பெறுமெனல்]

575. ஆவு மெருமையு மவைசொலப் படுமே.

இ--ள் : ஆவும் எருமையும் அவைபோலக் குழவிப்பெயர்க் கொடைபெறும் என்றவாறு.

குஞ்சரம், ஆணும் பெண்ணுமென இருகூற்றனவாகலான் 2‘அவை’ என்றான். மக்கண்மேல் வருங்காலும் இஃதொக்கும்.

“மடக்கட் குழவி யணவந் தன்ன
 நோயே மாகுத லறிந்துஞ்
 சேயர் தோழி சேய்நாட் டோரே.”

(குறுந். 64)

என்பது ஆன்குழவி.

“மோட்டெருமை முழுக்குழவி
 கூட்டுநிழற் றுயில்வதியும்.”

(பட்டின. 14-5)

என்றது, எருமைக்குழவி.

(20)

[குழவிப் பெயரை இவையும் பெறுமெனல்]

576.கடமையு மரையு முதனிலை யொன்றும்.

இ--ள் : இவையும் அப்பெயர்க்கு உரிய என்றவாறு.

குஞ்சரம்போலக் குழவிப்பெயர் பெறுமென்பான் ‘முதனிலையொன்றும்’ என்றானென்பது. அவை வந்துழிக் கண்டுகொள்க.

(21)

[குழவி என்னும் பெயர் இவற்றிற்குமுரியதெனல்]

577. குரங்கு முசுவு மூகமு மூன்று
நிரம்ப நாடி னப்பெயர்க் குரிய.

1. மேல் என்றது மரபியல் பதினேழாம் சூத்திரத்தை.

2. குஞ்சரமென்பது ஒருமையாக அவையெனப் பன்மையாற் சுட்டியது, ஆண் பெண் என்னும் வகைப் பன்மை நோக்கியென்பது கருத்து.