எனவும் வரும். ‘வரையார்’ எனவே, அவையெல்லாம்போலாது சிறுவரவினவென்பது பெற்றாம். (16) [கன்றென்னும் பெயரை இவையும் பெறுமெனல்] | 572. | கவரியுங் கராமு நிகரவற் றுள்ளே. |
இஃது, அவற்றொடு மாட்டெறிந்தது. இ--ள் :கவரியும் கராமும் கன்றெனப்படும் என்றவாறு. கவரிமான்கன்று கராக்கன்று என வரும். ‘அவற்றுள்ளே’ என்பது, முற்கூறிய ஏழனுண் முதனின்ற (571) யானையோ டொக்குமென்றவாறு. இதன் பயம்: “குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.” (574) என வருகின்ற பெயரும் இவற்றுக்கு எய்துவித்தலாயிற்று அது முன்னர்ச் சொல்லும். 1இவையெல்லாம் தம்மினொத்த வரவின அன்மையின் வேறு வேறு சூத்திரஞ் செய்கின்றவாறாயிற்று. (17) [கன்றெனற்கு ஒட்டகமுஞ் சிறுபான்மை உரியதெனல்] | 573. | ஒட்டக மவற்றோ டொருவழி நிலையும். |
இ--ள் : சிறுபான்மை ஒட்டகமும் கன்றெனப்படும் என்றவாறு. அஃது, ஒட்டகக்கன்று என வரும், ‘ஒருவழி’ என்றதனானே, எவற்றினும் இது சிறுபான்மையெனவுணர்க. (18) [குழவி என்னும் பெயர் யானைக்குரியதெனல்] | 574. | குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை. |
இ--ள் : ஒழிந்து நின்ற குழவிப் பெயர் குஞ்சரத்திற்கு உரிய என்றவாறு.
1. இவையெல்லாம் என்றது--இச்சூத்திரத்திற் கூறியவற்றையும் இதற்குமுன்னுள்ள சூத்திரங்களிற் கூறியவற்றையும். ஒத்த வரவினவல்லவென்றது எல்லாமொத்த வரவினவாகாது பயின்றும் பயிலாதும் வரும் என்றபடி. அதுபற்றியே வெவ்வேறு சூத்திரம் செய்தார் என்க. காரம்--முதலை. |