பக்கம் எண் :

 1

தொல்காப்பியர் - பொருட்படலம்

உரைப்பாயிரம்

மக்கள் பேசு மொழிகளில் புலமை சான்று செய்யுட் செல்வமும் சொற்சிற்ப வளமும் நிரம்பியவை மிகச் சிலவேயாம். அவையனைத்தும் மிகத் தொன்மையும், விரிந்து வரம்பறுத்திறுகிய இலக்கண யாப்புறவும் பெற்றுள்ளன. வளமிகுந்த பிற்காலப் புதுமொழிகள் சுருங்கி நெகிழ்ந்த இலக்கண நொய்மையுடையனவாய் வழங்குகின்றன. திட்பமும் விரிவும் ஒட்பமும் சிறந்த பண்டை மொழிகள் பல, தம் பரந்து செறிந்த இலக்கணப் பொறையால் நலிந்து நடை தளர்ந்து வழக்கிழந்து, பழமை பாராட்டுவாரளவில் பயிற்சி குறுகிப் பெரும்பாலோர்க்குப் பெயர் தவிரப் பிரிதறியக் கூடாத மறைமொழிகளாகி விட்டன. யவனம், இலத்தீன், எபிரேயம், பழைய பாரசீகம், ஆரியம் போன்ற பழம் பெரு மொழிகள் எல்லாம் வேண்டாது வியத்தற்குரிய பொருட்காட்சி சாலை வியப்புக்களும், தேடுவார் எளிதில் தெளியாத இருட்புதர் களுமாயிருக்கின்றன. அவற்றிலமைந்த ஆன்றோர் செய்யுட் சிறப்பை விரும்புவோர் அவற்றை அரும்பொருட் சுரங்கங்களாகக் கொண்ட கழ்ந்தாராய்ந்தும், சமையக்கோள் வரலாறு சொற்சிற்ப வளர்ச்சிகளைத் தேடுவோர் அவை புதைந்த பாழ்பழம் பரப்புகளாய்த் துருவியும் பேணுவதால், அவைகளிறந் தறவே மறக்கப் படாமலிருந்து வருகின்றன.

தொன்மை, சொற்சிற்பவளம், செய்யுட் சிறப்பு, நூற்றிட்பங்களில் முதுபெரு மொழியினத்திற் சேர்ந்து, பிற பல மொழிகளைப்போல வழக்கழியாமல், தளராது வளரும் உயிர்த்திறமும், இறவா இளமை வளமும் பெற்றுச் சாவாமொழி மூவாத் தமிழொன்றே.