பக்கம் எண் :

2நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

ஆழ்ந்தகன்ற நூற்பெருமை, செப்பனிட்ட சொற் செவ்விகளில் வடவாரியம் மேல்புல யவனம் முதலிய எதற்கும் இளையாச் சிறப்புடையது தமிழ். என்றாலும், வழக்கொழிந்த பிற முதுமொழிகள் வினைத்திட்பமொன்றே குறிக்கோளாய்க் கொண்டமைத்த நூற்பொறையால் நலிவுற்றன. அவ்வாறன்றி, எழுத்து, சொல், செய்யுள், பொருள், எல்லாம் திட்பமும், திகழும் ஒட்பமும் செழித்து, முதிரா இளநலம் தழையும் திறனும் ஒளிர்ந்தொழுகி, இழையும் செவ்வியும் நிறைந்து யாப்புறவுற்றது தமிழ்நூல். பிற பெருமொழிகளை நலிவித்த வளர்ச்சியைத் தளர்க்கும் செயற்கைக் கட்டுப்பாடுகளின்றி, இயல்போடியைந்த தன் நயத்தகுநூலே கொழுகொம்பாகத் தமிழ்மொழி நாளும் உயர்ந்து வளர்ந்தது. செறிவும் நிறைவும் செய்யாஎழிழும் தழையத் துணைசால் நூல்வளமுடைமை தமிழின் சிறப்பு. அதனால் மூவாமுதலாத் தமிழ்மொழி இறவா இளநலம் திகழத் தளரா வாழ்வும் வளரெழில்வளமும் பெற்று என்றும் நின்று நிலவுகிறது.

தற்காலம் தமிழில் தலைசிறந்து நிலவுவது தொல்காப்பியர் நூலே. அது, ஆரியப் பாணினிக்கும் தூரிய மேல்புல யவன அரித்தாட்டிலுக்கும் காலத்தால் முந்திய தொன்மையுடையது: பாணினியின் செறிவும், பதஞ்சலியின் திட்பமும், அரித்தாட்டிலின் தெளிவும், அவையனைத்திலுமில்லா வளமும் வனப்பும், அளவைநூன்முறை யமைப்பும் பெற்றுச் செறிவும் தெளிவும் நெறியாநெகிழ்வும் நிரம்பியமைந்தது. இத்தமிழ் நூல் பாணினிக்குப் பல நூற்றாண்டுகட்கு முந்தியது. வான்மீகர் பாராட்டிய கடல்கொண்ட கபாடம் அழியுமுன், அம்மூதூரிலாண்ட பாண்டியன் “நிலந்தருதிருவில் நெடியோன்” காலத்தில், அவனவையை அணிசெய்த புலவருள் தலைமை தாங்கிய பெரியார் ‘ஒல்காப்புகழுடைத் தொல்காப்பியரே’ தம் பெயரால் இத்தமிழ் பெருநூலை இயற்றினரென்று அந்நூற்பாயிரம் இயம்புகிறது. ஒரு நூற்கு ஏற்ற பெயரிடுவதும், அன்றி அதை ஆக்கியோன் பெயராலழைப்பதுமே பழைய தமிழ் வழக்கு. பாயிரமில்லது பனுவலாகாதென்பர் தமிழ்ச் சான்றோர். பாயிரம் கூற வேண்டிய பலவற்றுள் நூற்பெயரும் நூலியற்றியோர் பெயரும் இன்றியமையாதன. இந்நூலையாக்கியோர் பெயர் தொல்காப்பியரென்றும், அவர் பெயரே அந்நூற் பெயராக்கப் பட்டதென்றும் இந்நூற்பாயிரம் இயம்புகிறது.