தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 3 |
பண்டைத் தமிழகத்தில் “காப்பியர்” எனும் இயற்பெயர் தமிழரிடைப் பெருவழக்குடைத்தென்பது, அப்பெயருடைய புலவர் பலர் பண்டைத் தொகைச்செய்யுட்கள் செய்தவராய்க் கூறப்பெறுவதால் நன்கறியலாம். ஒருபெயருடையார் பலரிருப்பின் அவரிடை வேற்றுமை விளங்க வேண்டி, ஏற்புடை அடைகள் அவரவர் பெயரொடு தொடுக்கப்படுஞ் செவ்வியமுறையும் தொன்று தொட்டின்றுவரை நின்றுவரு முண்மை யாவருமறிந்ததே. பல்காப்பியர், காப்பியாற்றுக் காப்பியனார், சேந்தன்தந்தை காப்பியனார் எனக் காப்பியர் எனும் பெயருடைய புலவர் பலரைக் கேட்கின்றோம். அப்பெயருடையார் எல்லார்க்கு மிந்நூலுடையார் காலத்தால் முந்தியவராதலியன், இவர் இயற்பெயரொடு தொன்மை சுட்டுங் குறிப்படைகூட்டித் தொல்காப்பியரெனப் பண்டைப் புலவரால் பாராட்டப் பெற்றனராதல் வெளிப்படை. தமிழ்ப் பெரியார் அனைவரையும் ஆரியக் கலப்புடையராக்கித் தலைசிறந்த தமிழ்நூல்களுக்கு வடநூற் சார்பு கற்பித்துக் கொள்ளுவதே பெருமையெனக் கருதிய இடைக் காலத்தவர், இறந்த ஆரிய அகத்தியரை எழுப்பித் தமிழ்நூற்கே அவரை முழுமுதற் குரவரென்றொரு கதை கிளப்பித், தமிழ்த் தொல்காப்பியரை ஆரியப் பார்ப்பனராக்கியதோடமையாமல், அவரை இல்லாவகத்தியற்குப் பொல்லா மாணாக்கருமாக்கி முடித்தார். “காப்பியன்” எனும் தமிழ்ச்சிறப்பியற்பெயரைக் “காவியன்” எனும் வடசொற்றிரிபாக்கிக், “கவி” மரபுடைய சுக்கிரன் குடிப்பிறப்பைச் சுட்டும் காரணப் பொதுப் பெயராக்கி, இரண்டாமூழித் துவக்கத்தில் இராமனுக்கு மூத்த பரசுராமனுக்கு இவரைத் தம்பியாக்கிப், பிறகு மூன்றாமூழி யிறுதியில் வடமதுரையாண்ட கண்ணன் உதவிபெற்றுத் தமிழகத்து வந்து குடியேறியவராக ஒரு பொய்ப்புராணமும் புனையப் பெற்றது. இதற்கு வடநூல்களிலும் பழைய தமிழ்ச் செய்யுட்களிலும் ஆதரவு யாதுமில்லை. இவ்வாறரும்பாடுபட்டுத் தமிழ்க் காப்பியனை ஆரியக் கவிக்குலப் பார்ப்பனனாக்கிய தோடமையாமல், “தொல்காப்பியர்” எனும் அவர் தமிழ் நூற்பெயரையும் தொல்காப்பியமென வடநூற் தத்திதாந்த விதிப்படித் திரித்து வழங்கலாயினர். இது, இந்நூற்பாயிர வரலாற்றுக்கும் தமிழிலக்கண மரபுக்கும் முற்றிலும் முரணும் தவறு. ‘தொல்காப்பியன்’ என்பதே இந்நூலியற்றியார்க்கியற்பெயரும், அவர் நூலுக்காகுபெயருமாம். |