பக்கம் எண் :

4நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

இவர் தந்நூலிற் பலவிடத்தும், வடநூல் வழிகொள்ளாது தமிழ்மரபு தழுவியும் (அகத்தியரைச் சுட்டாமல்) தமக்கு முந்திய தமிழ்ச் சான்றோரியற்றிய பல முதனூல்களைத் தழுவியும் தாம் இந்நூலை எழுதியதாகத் தெள்ளத்தெளிய விளக்குகிறார். பாயிரமும் இதனைத் தெளித்து வற்புறுத்துகிறது. எனினும், இவ்வுண்மையை எண்ணாமலும், ஆரியர் வருமுன் தமிழில் விரிந்த பல நூலும் தனிவேறு மரபுகளும் வழங்கிய வரலாறறியாமலும், வடமொழி வல்லார் இடைக்காலத்தில் தாமறிந்த வடநூல் முடிபுகளை இத்தமிழ்ப் பெருநூலுட் புகுத்தி உரை கூறினர். அவருரை முடிபுகளைத் தொகுத்துப் பிற்காலத்தில் பன்னூல் பிறந்தன: அவற்றுட் சிறந்தது நன்னூல்.

முப்பதாண்டுகளுக்கு முன் ஓராராய்ச்சிக்காகத் தொல்காப்பியரின் சொற்படலத்தின் சிற்சில பகுதியைத் துருவ நேர்ந்தது. அவ்வளவில் முன் நன்னூலில் நான் கண்ட சில ஐயமகன்று தெளிவு பெற்றதுடன், தமிழ்ப் பழமரபு தழுவா வழுவால் முன் உரைகளிலும், அவற்றைப் பின்பற்றிய பன்னூல்களிலும் பொருந்தா முடிபுகள் புகுந்த நெறியும் அறியலானேன். உடனே தொல்காப்பியரின் சொற்படலத்தைப் பழைய பல உரைகளுடன் ஆய்ந்து துருவி முழுதும் படித்தேன். எழுத்தையும் ஒருமுறை தொடர்ந்தாய்ந்து முடித்தேன். அக்காலத்திலேயே என் பெருமதிப்பையும் உழுவலன்பையும் உரிமைக்கொண்ட இருமொழி இலக்கியப் பெருநிலை விளக்காயிலகிய (தற்போது மகாமகோபாத்தியாயராய் விளங்கும்) பண்டிதமணி கதிரேசப் பேராசிரியர் அவர்களோடும், காலஞ் சென்ற இலக்கணக்கடலனார் அரசஞ் சண்முகனாரோடும், தொந்நூலொடு நன்னூலை ஒத்துநோக்கிக் கண்ட உண்மைகள் சிலவற்றை எடுத்தளவி இன்பமும் பயனுமெய்தினேன்.

பிறகு, தொகைச் செய்யுட்களைத் துருவுங்கால் பற்பல பாட்டினுட்கோள் தொகுத்தாரின் துறைக்குறிப்பொடு பொருந்தாமை தோன்றியது. அவ்வையமகற்றி உண்மை தெளியவேண்டித் தொல்காப்பியர் பொருட் படலத்தைப் பல பழைய உரைகளுடன் ஆராய்ந்தேன். எழுத்திலும் சொல்லினும் விடப் பொருட்பகுதியில் உரைகாரர் தொல்காப்பியர் நூற்கருத்தைப் பல்காலும் பிறழக்கொண்டு மயங்குமுண்மை ஒருவாறு உணரலானேன். பொருளிலக்கணம் தமிழுக்குத் தனிச்சிறப்பாதலானும், அம்முறையில் வரையறுத்து வடித்தமைத்த