தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 11 |
51ஆம் சூத்திரம் பெருந்திணையியல் வகைகளையும், நிரலே விளக்குகின்றன. இவற்றுள் பின்னைய பெருந்திணையை விலக்கி முன்னதான கைக்கிளைக்கும் அன்பினைந்திணைகளுக்கும் பொருந்தவருவனவாய் முன்னே சுட்டப்பட்ட (1) நிகழ்ந்தது நினைத்தல், (2) நிகழ்ந்தது கூறி நிலையல் (3) மரபுதிரியாப் பிற உரிப்பொருள்கள் விரவல் (4) உள்ளுறை திணையுணர் வகையாதல், என்னும் நான்கும் வந்து பயிலுமென 52ஆம் சூத்திரம் கூறுகின்றது. 53ஆம் சூத்திரத்தில் இயற்பா வகைகளுள் கலியும் பரிபாடலுமே அகப்பொருட்குச் சிறந்துரியவாமென்பது சுட்டப்படுகிறது. ஈற்றிலுள்ள சூத்திரமிரண்டும் அகத்துறையில் தலைமக்கள் கூற்றுக்களில் இயற்பெயர் சுட்டுவது மரபன்றெனக் கூறுகின்றன. சூத்திரம் : 1 | | | கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த வெழுதிணை யென்ப. |
கருத்து : இது, அகத்திணைகள் ஏழென வரையறுக்கின்றது. பொருள் : கைக்கிளைமுதலாகப் பெருந்திணை இறுதியாக முன்னே சொல்லப்பட்ட அகத்திணை ஏழாமென்று கூறுவர் தமிழ்நூல் வல்லார். குறிப்பு : இச்சூத்திரத்தில் அகத்திணையேழும் நிரலே கூறப்பெறாமையானும், கிளக்கும் என்னாது கிளந்த என இறந்தகால எச்சம் பெய்த பெற்றிமையானும், இதன் பிறகுள்ள சூத்திர வைப்பு முறையில் கைக்கிளையை முதலாகவும் அதனையடுத்து அன்பினைந்திணையும் இறுதியிற் பெருந்திணையுமாக அமைத்துக் கூறப்பெறாமல், முதற்கண் அன்பினைந்திணை கூறி அவற்றின்பின் கைக்கிளை பெருந்திணைகள் தொடர்ந்து கூறப்படுவதாலும், “முற்படக்கிளந்த வெழுதிணை” என்பது அகத்திணையியலில் இச்சூத்திரத்தின் பின் அமைத்துக் கூறப்பட்ட முறையைச் சுட்டாதென்பது வெளிப்படை. எனவே, ஈண்டு “முற்படக்கிளந்த” என்பது இடத்தால் முற்படக்கூறும் அமைப்பு முறையோடு பொருந்தாமையால், காலத்தால் முற்படக்கிளந்த வொன்றனையே குறிக்குமென்பது தேற்றமாகும். |