பக்கம் எண் :

12நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

ஆகவே, பொருட்படலத்தின் முதலில், பொருள் அகம்புறமென இருவகைப்படுமென்பதும், அவற்றுள் பின் கூறப்பெறும் புறத்திணை ஏழாதல் போலவே அகத்திணையும் ஏழாமென்பதும், அவ்வகத்திணையும் கைக்கிளை அன்பினைந்திணை பெருந்திணை என ஏழாக வகுக்கப்படுமென்பதும், ஆகிய இவற்றைச்சுட்டிய சில சூத்திரங்கள் அகத்திணையின் முதற்கண் இச்சூத்திரத்திற்கு முன்னே ஆசிரியரால் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறாயின் மட்டும் ‘முற்படக்கிளந்த’ எனுமிச்சூத்திரச் சொற்களுக்குப் பொருளமைதியும், ‘கைக்கிளை முதலா’ எனுந்தொடர்க்குப் பொருளும் அமைவதாகும். இப்பழநூற் சூத்திரங்கள் சில கடல்கோளாலும் புலம் பெயர்தலாலும் வீழ்ந்து மறக்கப்பட்டிருத்தல் கூடுமென்பது களவியலுரையாலும், “தலைமகள் கூற்று உணர்த்திய சூத்திரம் காலப்பழமையால் (ஏடு) பெயர்த்தெழுதுவோர் விழ எழுதினார்போலும்” என்னும் இளம்பூரணர் உரைக் குறிப்பாலும் தெளியப்படும். அவ்வாறு கொள்ளாக்கால் இச்சூத்திரச் சொற்றொடர்கள் பொருந்தும் பொருளமைதி பெறுமாறில்லை. ஆதலாலும் ‘முற்படக்கிளந்த’ என்னுந் தொடருக்கு ‘இதற்கு முன்னே ஆசிரியர் கூறிப்போந்த’ என்று அமையப் பொருள் காண்பதே பொருத்தமாகும்.

சூத்திரம் : 2 
 அவற்றுள்,
நடுவ ணைந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே.

கருத்து : இது, மேற்குறித்த திணைஏழனுள், தமக்கென நிலஉரிமையுடையன நான்கெனக் குறிக்கின்றது.

பொருள் : அவற்றுள் நடுவணைந்திணை = முன்னைச் சூத்திரத்துட்கூறிய ஏழுதிணைகளுள் முதலுங்கடையுமான கைக்கிளை பெருந்திணைகளை நீக்கி, நடுநின்ற முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் எனும் ஐந்திணை;

நடுவணதொழிய = தம்முள்நடுவுநிலைத்திணையாகிய பாலையொழிய;

படுதிரைவையம் பாத்தியபண்பே = கடல்சூழ்ந்த நிலத்தைப் பகுத்த இயல்பிற்று.