14 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
மாட்சியவாகி, விரவும் பொருளும் விரவுமென்ப” என்னும் 45ஆம் சூத்திரத்தால் தெளியப்படும். இதில் மூன்றே என்பதில் ஏகாரம் தேற்றமும் பிரிநிலையுமாம். சிறந்தனவே என்பதிலேகாரம் இசை நிறையாகவேனும் அசை நிலையாகவேனுங் கொள்ளுக. சூத்திரம் : 4 | | | முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டி னியல்பென மொழிப இயல்புணர்ந் தோரே. |
கருத்து : முன்னைச் சூத்திரங்கூறும் மூன்றனுள் முதற்பொருளினைத்தென இச்சூத்திரம் விளக்குகிறது. பொருள் : முதலெனப்படுவது = முதற்பொருளென்று கூறப்படுவது; நிலம் பொழுதிரண்டினியல்பு = நிலமும் பொழுதுமாகிய இரண்டினியல்பாம்; என மொழிப இயல்புணர்ந்தோரே = என்று சொல்லுவார் பொருளிலக்கணம் உணர்ந்த புலவர். குறிப்பு : இதில் ஈற்றேகாரம் அசை நிலை. சூத்திரம் : 5 | | | மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே. |
கருத்து : இது மேலே இரண்டாஞ் சூத்திரத்துட் கூறியாங்கு, நானிலம் முறையே நான்குதிணைக்கு உரிமைபெறுமுறை கூறி, நிலமுதற்பொருள் திணையுரிப்பொருளொடியையுமாறு விளக்குகிறது. பொருள் : மாயோன்மேய காடுறையுலகமும் = கருநிறக்கடவுள் உறைவிடமாகிய நிரைமேயும் காட்டுநிலப்பகுதியும்; சேயோன்மேய மைவரையுலகமும் = செவ்வேளுறையும் மஞ்சுதவழும் மலைநிலப்பகுதியும்; வேந்தன்மேய தீம்புனலுலகமும் = இந்திரனுக் கிருப்பிடமாகிய இனிய புனல்நிறை நிலப்பகுதியும்; வருணன்மேய பெருமணலுலகமும் = கடல்கெழுகடவுளாகிய வருணன் விரும்பும் |