தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 143 |
இயலில் இத்தொகையின் வகை நான்கும் சுட்டப்படுமெனத் தாம் கூறாமலே எதிர்பார்க்க வைக்கவும், இடையில் வருபவற்றுள் அவை எவை எனத் துணியாமல் மயங்கவைக்கவும் கருதுவரா?அவ்வாறு மயக்கம்தரும் கருத்தை அவருக்கேற்ற நினைப்பது உரையறமன்று. அண்மையில் வகை விரிகள் கூறப்பெற்று, எளிதில் தெளிவும் துணிவும் தருதற்கு ஏற்றவிடத்தன்றிப் பிற இடங்களிலெல்லாம் இந்நூலார் வாளா தொகைகூறி அமைவதில்லை. தொகை தரும் இடந்தொறும் அதன் வகையும் விளக்கிச் செல்வதவர் பிறழா முறையாதல் இந்நூல் முழுவதும் காணலாம். அதுவேயுமன்றிப், “பின் களவியலிற் குறிக்கப்படுவதாகக் கருதும் ஒரு கைக்கிளையை விலக்கி, இங்குப் பெருந்திணைக்குமுன் விளக்கிய வேறொரு கைக்கிளையைக் குறிப்பதற்கு ‘முன்னதற் கென்ப’ எனச் சிறப்பெய்துவித்தார்” என்பர் நச்சினார்க்கினியர். அதனை அடுத்துக் “களவியலில் ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ என்றது முதலாக இந்நான்கும் கூறுமாறு ஆண்டுணர்க”, எனக் கூறி, “முன்னையநான்கும்” எனும் தொடரில் வரும் நான்கன்வகை விவரம் குறியாமல் வாளா தொகைகூறி விடுத்தார். களவியலில் அச்சூத்திரங்களுக்கு உரைகூறு மிடத்தும் எந்நான்கும் இவையென விளக்கினாரிலர். அங்குத் தொல்காப்பியர் “காட்சி, ஐயம், தெளிவு” என மூன்றே குறிக்கக் காண்கிறோம். நச்சினார்க்கினியர் கூறுமாறு காட்சி ஐயம் இரண்டுந்தவிரத் தெரிதல், தேறல் என வேறிரண்டு கூட்டி நான்கு பகுதிகள் ‘இயற்கைப் புணர்ச்சிக்கும்’ தலைவன் தலைவியர் இருவரின் உள்ளவுடம்பாடு அறிய ‘நாட்டம் இரண்டும் கூட்டியுரைக்கும் குறிப்புரைக்கும்’ முன் நிகழ்வனவாகத் தொல்காப்பியர் கூறினாறிலர். ஆகவே, களவியலில் தொல்காப்பியர் மூன்றே இன்றியமையா ‘நற்காமமுற்குறிப்பாகக் கூறினராதலால், அவற்றை இங்குக் கைக்கிளைக் குறிப்பாமெனச் சுட்ட நினைப்பின் “முன்னையமூன்று” மென்னாது ‘நான்கும்’ என முறையிறந்து கூறியிரார். ஈண்டு நான்கெனத் தெளியக் கூறுதலால், இந்நான்கும் பின் களவியலிற் பேசப்படும் மூன்றல்லாத வேறாதல் வெளிப்படை. இச்சூத்திரத்துத் தொகையெண் குறிக்கும் நான்கும் இவையென விளக்கப்பெறாததால், இதனோடியைந்து பொருள் தெளிதற்கு உதவுவதான நான்கன் வகை இச்சூத்திரத்தையடுத்து இவ்வகத்திணை யியலிலேயே விளக்கப் பெற்றிருக்க வேண்டுமென்பது எளிதில் தெளியப்படும். அவற்றை அறியின், சூத்திரச் செம்பொருளும் உடனறியப்படுவதாகும். |