பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை149

சிறப்பைச் சுவைபட ஆடிக்காட்டுவதே நாடக வழக்காம். ஆதலால் இவ்விரண்டும் மக்களின் வாழ்க்கையொடுபட்ட இயல்புகளையே குறிப்பனவாம். அகத்திணைப் புலனெறி வழக்கம் எல்லாம் மக்கள் வாழ்க்கையின் மெய்யியல்புகளைத் தழுவியே நடத்தல் இன்றியமையாததாதலால், அவ்வாறு புலனெறி வழக்கஞ் செய்தலே தமிழ் மரபென்பதைத் தொல்காப்பியர் இச்சூத்திரத்தால் வலியுறுத்துவர்.

இனி, பலவகைப் பாக்களில், புறத்திணைக்குச் சிறப்பனவும் புறத்திணைக்கும் அகத்திணைக்கும் பொதுவாய் வருவனவுமான வெண்பா அகவல் வஞ்சிகளினும், கலியும் கலியுறுப்புக் கொண்டு நடக்கும் பரிபாட்டுமாகிய இரண்டுமே அகத்திணைக்குச் சிறந்து பயிலும் பெற்றியன. அகத்திற்குரிய பல்வேறுணர்ச்சிகளுக் கேற்பச் செவ்வி சிறந்த ஓசை வளமும், உள்ளியன உரைத்தற்கு வேண்டியாங்கு விரவும் துள்ளல்தூக்கு முடையன அவ்விரு பாக்களுமாதலால், பண்டைத் தமிழ்ப் புலவர் அவற்றை அகத்திணைக்குரியவாக் கொண்டனர். அதனால் இவ்வியலில் அச்சிறப்புரிமை சுட்டப்பட்டது.

சூத்திரம் : 53 
 மக்கள் நுதலிய அகனைந் திணையும்
சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஅர்.

கருத்து : இது, அன்பினைந் திணைக்குச் சிறந்த ஒருமரபு கூறுகிறது.

பொருள் : மக்கள் நுதலிய அகனைந்திணையும் = மக்கள் மதிக்கும் காதல் கண்ணிய நடுவனைந்திணைகளிலும்; ஒருவர் சுட்டிப் பெயர்கொளப் பெறாஅர் = தலைமக்கள் தம்முள் யாரும் இயற்பெயர் சுட்டி அகவப்பெறார்.

குறிப்பு : காதல் கண்ணிய ஐவகை அகவொழுக்கமும், நாண்- தன்னலமறக்கும் அன்பு - காதலாற் றவறுகாணாமடம் முதலிய சால்புகளாற் சிறந்த மக்கட் தன்மைக்கே இயைவதாகலின், “மக்கள், நுதலிய அகனைந்திணை” எனக் கூறப்பட்டது. ‘மக்கள் நுதலிய’ என்பது, மக்கள் தாம் பொருளாகக் கருதிய எனவிரியும். இனி, மக்கள் என்பதை, மக்கட்டன்மை