பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை161

தனித்திணையாக்காமல், செந்தமிழியற்கை சிவணிய நிலத்துப் பழைய முறை பேணி முற்றுகை பற்றிய உழிஞைத் திணையிலடக்குவர் தொல்காப்பியர்.

அவற்றின் பின், பகைமேற் சென்றாரைத் தகைத்து நின்றா ரெதிரூன்ற, தானையிரண்டும் தம்முள் தலைமயங்கி மலைதலாகும் தும்பைத் திணையையும், அதன் வகை துறைகளையும் 14 முதல் 17 வரையுள்ள சூத்திரங்கள் தெரிவிக்கின்றன. படையெழுச்சியை மட்டும் வஞ்சியென வகுப்பதும், சென்றாரை நின்றாரெதிர்ப்பதைக் காஞ்சியெனத் தனியொரு திணையாப் பிரிப்பதும், எதிர்த்திருபடையும் அதர்ப்பட மலைதலைத் தும்பையென வேறோர் திணையாக் கூறுவதும் பிற்கால வழக்கு. சென்றாரை நின்றாரெதிர்ப்பது போராய்த் தும்பையில டங்குதலானும், பொருதலற்ற எதிர்ப்பெதுவுங் கருதல் கூடாமையானும், பண்டைத் தமிழ் நூலோர், சென்ற பகையெதிர் நின்றுதகையும் எதிர்ப்பும், இருதிறப்படையும் ஒருதலைமலையும் போரும் உடனமையத் ‘தும்பை’ யென வொரு திணையே கொண்டார்; தொல்காப்பியரும் அப்பழமரபே பேணிக்கூறுவர்.

போர்க்கூறாகும் தும்பைத்திணைக்குப்பின், பொருது வென்றோர் வீறுகூறும் வாகைத்திணையும் அதன் துறைகளும் 18 முதல் 21 வரையுள்ள சூத்திரங்களில் தெளிக்கப்படுகின்றன. அமர் வெற்றியுடன், அதற்கியைபுடையதாய்ப் பிறதுறைகளில் இகலிவென்றோர் வீறும் கூட்டி, ஒப்பக்கூறல் ஒன்றெனமுடித்தல் தன்னினமுடித்தல் எனுமுறையில், பாராட்டுக்குரிய வெற்றியனைத்தும் இவ் வாகைத் திணைவகையிலடக்கிக் கூறப்படுகின்றன.

அதையடுத்து, ‘அமர்கொள்மரபின்’ தும்பையும் வாகையுமான போரும் வெற்றியுமொழிய, மற்றைய விழுப்பமும் விழுமமும் விளைக்கும் “பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும் நில்லாவுலகம் புல்லியநெறித்”தாய பிறவொழுக்கத் தொகையாம் காஞ்சித் திணையும் அதன் துறைகளும் 22 முதல் 24 வரையுள்ள சூத்திரங்களாற் கூறப்படுகின்றன.

இவ்வியல் ஈற்றில், இகலில் மிக்கார் வெற்றிமட்டுமன்றி, எனைத்துவகையானும் மேதக்காரை மீக்கூறலாய் அவர் பீடும்வீறும் புகழும்பாடாண்டிணையும் அதன் பொதுச்சிறப்பியல்புகளும் வகை துறைகளும் விரிக்கப்படுகின்றன.