பக்கம் எண் :

162நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

இப்பழைய முறையினைத் தழுவாமல், பன்னிருபடலம், ‘வெண்பா மாலை’ முதலிய பிற்கால நூல்கள் புறத்திணைகளைப் பன்னிரண்டாக்கிக் கொண்டன. பன்னிருபடலம் பிற்கால நூலாதல் தேற்றம். அதிற் கூறப்படும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, காஞ்சி முதலிய பலதிணையியலும் அவற்றின் துறைவகையும் தொல்காப்பியர் கொள்கையோடு மாறுபடுதல் கண்கூடாதலின், முரணுமிவ்விரண்டும் ஒரே கணக்காயரிடம் இத்திணைகளை ஒருங்கு கேட்டோர் கூற்றாதல் கூடாமை ஒருதலை. பன்னிருபடலத்தின் வெட்சிப்படலம் தொல்காப்பியரால் அவரிவ்வியலிற் கூறுவதற்கு மாறாக இயற்றப்பட்ட தென்பதொன்றே பன்னிருபடலமாக்கியோர் காலம்பற்றிய கதையின் பொய்ம்மையைத் தெளிப்பதாகும். “பன்னிரு படலத்தில் வெட்சிப் படலம், தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது” என்று இளம்பூரணர் இவ்வியல் வெட்சி கூறும் சூத்திரவுரைக் கீழ் விளக்கியுள்ளார். புறத்திணைத் துறைகளைப் பலவாறு பிற்காலத்தே பிறழக்கூறியோர் தம் பெயரொடு கூறத் துணியாமல், தம் நூலுக் குடன்பாடும் ஆட்சியும் பெற வேண்டிப் பண்டைப் பெரியோர்பெயரோ டதனை வெளிப்படுத்தியது வியப்பில்லை. ஞானவெட்டியை வள்ளுவருக்கும், புலமையற்ற பல பிற்காலச் சோதிட மருத்துவச் செய்யுட்களை அகத்தியருக்கும் சுமத்தியது போலவே, காலத்தால் மிகப்பிந்திய பன்னிருபடலத்தைத், தமிழகத்துப் “புலந் தொகுத்தோனெனத் தன்பெயர் நிறீஇய” தொல்காப்பியருக்கும், அவரோடொருபள்ளி மாணவராகக் கருதப்பெற்ற பழம்புலவருக்கும் சுமத்தியுள்ளாரெனத் தெளிதல் எளிதாம். இனி இப் “பன்னிருபடலம் முதனூலாக (அதன்) வழி நூலே . . . . . . வெண்பாமாலை” யாதலால், பின்னது முன்னதன் முறையையே முழுதுந்தழுவி நடப்பதாகும். இவ்வுண்மை தேறாமல், இவற்றின் புதுமுறையே பழைய தொல்காப்பியமுங் கூறுமெனக் கருதிப் பிற்காலப் புலவர் சிலர் அப்பண்டைநூற் சூத்திரங்களுக்குப் பின்னூற் கருத்துக்களையேற்றிப் பலவிடங்களில் பிறழ உரைகூறி யிடர்ப்படுதலறிந்து பிழைவிலக்கி மெய்ப்பொருள் காணமுயலுவது நம்மனோர் கடமையாகும்.

எழுதிணை யென்னும் முந்துநூன் முறைபிறழப் பிந்தியோர் கொண்ட புறத்திணை பன்னிரண்டும் வருமாறு : (1) போர்த்துவக்கமாம் ஆகோள் வெற்றியும், (2) அதற்கு மறுதலையாய், வெட்சியோர் கவராமல் நிரை மீட்க முயலும் காவலர் எதிர்ப்பாம்கரந்தையும், (3) பகைவரின் நாடுகொள்ள வெழும்