பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை175

சூத்திரம் : 4 
 மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையு மத்திணைப் புறனே.

கருத்து : இது, மேற் கூறிய வெட்சி விளக்கத்திலமையாத போர்த்துவக்கக் குறியாகும் வெட்சிவகை வேறு சில கூறுகின்றது.

பொருள் : மறங்கடைக் கூட்டிய = மிடல் மலிவால் அடல் விருப்பின் விளைந்த; துடி நிலை = முரசு பராவுதலும்; சிறந்த கொற்றவை நிலையும் = போருக்குச் சிறப்புரிமையுடைய கொற்றவைக் கடவுளைப் பராவுதலும்; அத்திணைப் புறன் = (ஆகிய இவ்வெட்சி வகைகளும்) மேற்குறித்த குறிஞ்சித் திணைக்குப் புறனாகும்.

குறிப்பு : ‘மறங்கடைக் கூட்டிய’ என அடை கொடுக்கப் பட்டது: இதுவும் ‘மறனுடைய மரபாம்’ புறத்திணையெனற்கு. இதன்மேல் நடத்தக் கடவது போரேயாதலானும், போர்த்தொடக்கமே வெட்சித் திணையாதலானும், ஆகோளைப் போலவே முரசு பரவுதலும், தொடங்கும் போரில் வெற்றி விளைக்கும்படி கொற்றவை பராவுதலும், போர்த் தொடக்க நிகழ்ச்சிகளாமாதலானும், பின்னைய விரண்டும் முன்னையது போலவே வெட்சித் திணையாய்க் குறிஞ்சிக்குப் புறனா யமையும் பெற்றி இதிற் கூறப் பெற்றது. அகரச்சுட்டு ‘புறன்’ என்னுங் குறிப்பால் வெட்சிக்கு அகமாக முதற் சூத்திரத்திற் குறித்த குறிஞ்சியையே குறிக்கும். அகரச் சுட்டு வெட்சித் திணையைக் குறிப்பதாகக் கொண்டு, துடி நிலையும் கொற்றவை நிலையும் வெட்சிக்குப் புறனாம் என்பர் நச்சினார்க்கினியர். வெட்சியே புறனாதலானும், பொதுவியல் பாடாண் முதலியவற்றைப் புறப்புறமென வகுத்த வெண்பாமாலை முதலிய பின்னூலாரும், ‘துடிநிலை’ ‘கொற்றவைநிலை’களைப் புறப்புறமென்னாது வெட்சியின் துறைகளாய் அடக்கினராதலானும், இச்சூத்திரத்தின் அகரச்சுட்டு வெட்சிக்கு அகமாகிய குறிஞ்சியையே குறிப்பது தேற்றம்.

முதற் சூத்திரத்தில், வெட்சியைக் கரவில் நிரைகவர்தல் என விளக்கியதால், அதிலமையாமல் வெட்சியின்பாற் பட்டுப் போர்த் துவக்கத்தில் நிகழ்பவற்றுள் இவ்விரு பராவுதலின் இன்றியமையாமைபற்றி இவற்றை விதந்து கூறல் வேண்டப்பட்டது. முன் அகப்பகுதியில் உரிப்பொருள் ஐந்தில் புணர்வும்